சூர்யா, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி: ஒரே படத்தில் முன்னணி நட்சத்திரங்கள்

  • IndiaGlitz, [Wednesday,October 28 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தற்போது முன்னணி இயக்குனர்கள் அனைவரும் திரைப்படம் இயக்குவதற்கு பதிலாக ஓடிடி பிளாட்பாரத்திற்காக ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்கி வருகின்றனர். ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ், கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் சுகாசினி ஆகியோர் இயக்கிய ஆந்தாலஜி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது ’நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படம் உருவாகி வருகிறது. 9 முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் சூர்யா, விஜய் சேதுபதி உள்பட பல பிரபலங்கள் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

கேவி ஆனந்த், கௌதம் மேனன், விஜய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன் ராம், கார்த்திக் நரேன், ரதீந்திரன் பிரசாத் மற்றும் அரவிந்தசாமி ஆகிய 9 இயக்குனர்கள் இயக்கும் ஆந்தாலஜி திரைப்படம் நவரசா.

இந்த ஆந்தாலஜி திரைப்படத்தின் ஒன்பது பகுதிகளில் சூர்யா, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சித்தார்த், பிரகாஷ்ராஜ், உள்ளிட்ட முன்னணி நடிகர்களும், ரேவதி, நித்யாமேனன், பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பூர்ணா, ரித்விகா உள்பட முன்னணி நடிகைகளும் நடித்து வருகின்றனர்.

9 ஒளிப்பதிவாளர்கள் 9 பாகங்களுக்கு பணிபுரிந்து வருகின்றனர் என்பதும் இந்த ஆந்தாலஜி படத்தை மணிரத்தினம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபிகேசன் ஆகியோர் தயாரித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 9 முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ஆந்தாலஜி திரைப்படம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.