Neruppuda Review
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கலையுலக வாரிசு விக்ரம் பிரபு கம்பீர தோற்றமும் கதாநாயகனுக்கான அத்தணை தகுதிகள் இருந்தும் கதை தேர்வில் ஏனோ தொடர்ந்து சறுக்கி வருகிறார். அவர் முதன் முதலில் தயாரித்து நடித்திருக்கும் நெருப்புடாவும் புகை மூட்டமே அதிகமாக இருக்கும் படி வந்திருக்கிறது.
சாக்கடை அள்ளும் தொழிலாளி பொன்வண்ணனின் மகன் விக்ரம் பிரபு தன் நண்பர்கள் நால்வருடன் இணைந்து எங்கு நெருப்பு பிடித்தாலும் அரசாங்க ஊர்தி வருவதற்கு முன் சென்று பாதிக்க பட்டவர்களை காப்பாற்றுபவர். அவரின் நல்ல குணத்தை அறிந்த உயர் தீயணைப்பு அதிகாரி தருண் குமார் அரசாங்க வேலை வாங்க உதவ முன் வருகிறார். இந்நிலையில் நிக்கி கல்ராணியை சந்தித்து இருவரும் காதல் கொள்கிறார்கள். ஹீரோவின் நண்பர்களில் ஒருவரான மஹத் ராகவேந்திராவிடம் வம்பிழுக்கிறார் வின்சென்ட் அசோகன் அதில் நடக்கும் தள்ளு முள்ளுவில் வின்சென்ட் இறக்க அவர் நண்பரான தாதா மதுசூதனன் பழி வாங்க புறப்படுகிறார். விக்ரம் பிரபு நண்பனை காப்பாற்ற கொலை பழியை தான் ஏற்க பல லாஜிக் இல்லாத திருப்பங்களுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதி கதை.
விக்ரம் பிரபு நன்றாக உழைத்திருக்கிறார் சண்டை காட்சிகளில் அதிரடி காட்டி தந்தையிடம் நெகிழ்ந்து நிக்கி கல்ராணியை காதலிப்பது வரை குறை சொல்ல முடியாத சிறப்பான நடிப்பு. இருப்பினும் விக்ரம் பிரபு சற்று தன் தந்தையின் சினிமா வாழ்க்கையை பின்பற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. பிரபு சங்கிலியில் அதிரடியாக அறிமுகமாகி பின் சூரக்கோட்டை சிங்கக்குட்டி வெற்றிக்கு பின் நிறைய தோல்விகள் கண்டு மார்க்கெட் இழந்தார். அப்போது அவர் மீண்டு வர கலைஞியரின் பாலைவன ரோஜாக்கள் போன்ற படங்களை தேர்ந்தெடுத்தார். அதில் லட்சுமி சத்யராஜ் நளினி ஜனகராஜ் ஆகியோரைவிட முக்கியத்துவம் குறைந்த பாத்திரமாக இருந்தாலும் தனி முத்திரை பதித்து கவனம் ஈர்த்தார் அதன் பின்னர் படி படியாக சின்ன பூவே மெல்ல பேசு போன்ற படங்களுக்கு பின் என் தங்கச்சி படிச்சவ படத்தில் பெரும் வெற்றி பெற்று முன்னணி கதாநாயகனாக பல வருடங்கள் ஆட்சி செய்தார். ராசியான கதாநாயகி என்று பெயர் வாங்கியிருக்கும் நிக்கி கல்ராணி இரண்டு பாடல்களிலும் ஒரு சில காட்சிகளிலும் தலை காட்டுகிறார். காட்டு கத்து கத்தி காமெடி என்ற பெயரில் மொட்டை ராஜேந்திரன் திரையில் வரும்போதெல்லாம் மண்டை காய வைக்கிறார். பொன்வண்ணன் எப்போதும் போல நடிப்பில் முத்திரை பதிகிறார். நான்கு நண்பர்களில் மஹத் ராகவேந்திராவுக்கு சொல்லிக்கொள்ளும்படியான பாத்திரம் குறை வைக்கவில்லை. வில்லன் மதுசூதனன் பழகி போன அரத பழசான தாதாவாக பயத்துக்கு பதில் பல இடங்களில் சிரிப்பை தான் வரவழைக்கிறார். திடீர் பாத்திரமாக கிளைமாக்ஸில் தோன்றும் சங்கீதா பயமுறுத்தும் மேக்கப்பை விட கர்ணன் கொடூர குரல் மற்றும் வசன உச்சரிப்பில் ஏற்கனவே காயப்பட்ட ரசிகன் மீது உப்பை தேய்த்து விடுகிறார்.
படத்தில் நண்பர்களுக்குள்ளான அன்யோனியம் முதல் நிக்கி விக்ரம் பிரபு காதல், தாதா மோதல் மற்றும் சங்கீதாவின் வரவு என்று அத்தணை செயற்கை தனத்தில் இயல்பாக தோன்றுவது விக்ரம் பிரபு பொன்வண்ணன் சம்பந்தப்பட்ட அப்பா மகன் பாச பிணைப்பு மட்டுமே. படத்தில் ரெட்டை அர்த்த வசனம் மற்றும் ஆபாசமான விஷயங்கள் எதுவும் இல்லை என்பதும் சற்று ஆறுதல்.
படத்தில் நடிகர்கள் அனைவரையும் நாடக தனமாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். உதாரணதிற்கு நிக்கியை வில்லன் கடத்தியபிறகு அவர் அம்மா அப்பா இருவரும் காமிரா பொசிடிஒன் பார்த்து நிதானமாக நின்று விக்ரம் பிரபுவிடம் அதை ஒரு செய்தி போல வாசிக்கிறார்கள் கொஞ்சம் கூட பதட்டமின்றி. இந்த மாதிரி காட்சிகள் அநேகம். உரையாடல்கள் படு செயற்கை திரைக்கதையில் ஏராளமான திருப்புங்கள் இருந்தும் ஒன்று கூட கதையை நகர்த்த உதவாதது பரிதாபம்.ஆர் டி ராஜசேகர் கைவண்ணத்தில் காமிரா பளிச் மற்றபடி சான் ரோல்டன் பாடல்களும் கேட்கும்படி இருக்கின்றன பின்னணியும் ஓகே. இப்படி ஒரு திரைக்கதை அமைந்துவிட்ட பிறகு எடிட்டர் தியாகு என்னதான் செய்வார் பாவம். அறிமுக இயக்குனர் அசோக் குமார் தன்னை சுற்றி திறமைசாலிகளை வைத்து கொண்டு கதையிலும் கதை சொன்ன விதத்திலும் பின்னோக்கி சென்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
விக்ரம் பிரபுவின் தீவிர ரசிகர்களுக்கு பிடிக்கலாம்
- Read in English