'நேர் கொண்ட பார்வை': நேர்மையான பார்வை
'விஸ்வாசம்' என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை கடந்த பொங்கல் தினத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக அளித்த தல அஜித், தற்போது சமூக அக்கறையுடன் கூடிய கதையம்சம் கொண்ட 'நேர் கொண்ட பார்வை' திரைப்படத்தை கொடுத்துள்ளார். வழக்கமான அஜித்தின் மாஸ் படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இந்த படத்தில் அஜித்துடன் ஷராதாஸ்ரீநாத், வித்யாபாலன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் இருந்து விறுவிறுப்பாகவும் 'பிங்க்' திரைப்படத்தைவிட ஒரு படி மேலாகவும் இயக்கியுள்ள எச்.வினோத்தின் இந்த நேர்மையான திரைப்படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
அர்ஜூன் சிதம்பரம் என்ற இளைஞர் நாயகி ஷராதா ஸ்ரீநாத்திடம் முறைகேடாக நடப்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அர்ஜூன் சிதம்பரத்தை நாயகி அடித்ததால் அதை மனதில் வைத்து ஷராதாவுக்கும் அவருடைய தோழிகள் அபிராமி மற்றும் ஆண்ட்ரியா ஆகியோர்களுக்கும் அர்ஜூனும் அவரது நண்பர்களும் சேர்ந்து கொடுக்கும் டார்ச்சர்கள் தான் இந்த படத்தின் மெயின் கதை. ஷராதா வீட்டிற்கு பக்கத்து வீட்டில் குடியிருக்கும் வழக்கறிஞர் அஜித், அந்த பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை கண்டு கொதித்தெழுந்து தானாகவே முன்வந்து உதவுகிறார். இருதரப்பினர்களுக்கு இடையே நடைபெறும் சட்டப்போராட்டத்தில் ஷராதாவுக்கு அஜித் நீதி வாங்கி கொடுத்தாரா? என்பதுதான் இந்த படத்தின் கதை
தல அஜித் தனது கோபம் மற்றும் ஆங்காரமான உணர்வை முகத்தில் வெளிப்படுத்தும் நடிப்பை அட்டகாசமாக செய்துள்ளார். அவர் பேசும் ஒவ்வொரு வலிமையான வசனங்களும் அவரது நடிப்பு நுணுக்கங்களை வெளிப்படுத்துகிறது. தல அஜித்தின் கேரியரில் இதுவொரு சிறப்பான படம் என்றால் மிகையில்லை
சுதந்திர பெண்ணாக சுற்றித்திரிந்து சிக்கலில் மாட்டும் பெண் கேரக்டரில் ஷராதா ஸ்ரீநாத். அதிர்ச்சி, பயம், கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளை நன்றாக வெளிப்படுத்தி மீரா கிருஷ்ணன் என்ற கேரக்டராகவே வாழ்ந்துள்ளார்.
அபிராமியும் ஆண்ட்ரியாவும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கேரக்டர்களை நுட்பமாக செய்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். மேகாலய பெண் கேரக்டருக்கு பொருத்தமானவர் என்பதால் 'பிங்க்' படத்தில் நடித்த ஆண்ட்ரியாவை இயக்குனர் இந்த படத்திலும் பயன்படுத்தியுள்ளது சிறப்பு.
பணக்கார, திமிர் பிடித்த, ஆணாதிக்க குணாதிசியங்கள் கொண்ட ஆதிக் கேரக்டரில் அர்ஜூன் சிதம்பரம் நடித்துள்ளார். இவருடைய நண்பர்களாக அஸ்வின், சுஜித் ஆகியோர்களின் நடிப்பும் ஓகே. தொலைக்காட்சியில் பேட்டி எடுக்கும் பாணியில் ரங்கராஜ் வசனங்கள் பேசி நடித்திருந்தாலும் முதல் படம் என்பதால் ஓகே சொல்லலாம். வித்யாபாலன் மற்றும் டெல்லி கணேஷின் சிறப்பு தோற்றங்கள் படத்தின் மற்றொரு பிளஸ் ஆகும்
முதல் பாதியில் மூன்று பெண்கள் ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்வதும், அதன் பின் அஜித் அறிமுகமாகி அவர்களுக்கு உதவுவதிலும் திரைக்கதை சரியான பாதையில் செல்கிறது. இடைவேளையில் அஜித் ரசிகர்களுக்காக ஒரு மாஸ் காட்சியை வைத்து இயக்குனர் அசத்தியுள்ளார். இரண்டாவது பாதி பெரும்பாலும் நிதிமன்ற காட்சிகளாக இருந்தாலும் ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் அவரவர்களுடைய உணர்வை வெளிப்படுத்தும் காட்சிகள் இருப்பது படத்தின் மற்றொரு பிளஸ். நீதிமன்ற காட்சிகளில் ஷராதா ஸ்ரீநாத் மற்றும் அபிராமி ஆகிய இருவருக்கும் தங்களுடைய திறமைகளை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளனர். அஜித் கிட்டத்தட்ட இரண்டாம் பாதியின் மொத்த காட்சிகளை கையில் எடுத்து நடிப்பில் அசத்தியுள்ளார். நீதிமன்ற காட்சி ஒவ்வொன்றிலும் அஜித் பேசும் வசனங்களும், அவரது நடிப்பும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மை
யுவன்ஷங்கர் ராஜாவின் பின்னணி இசை திரைக்கதைக்கு பெரிதும் உதவுகிறது 'அகலாதே' பாடல் இன்னும் சில வருடங்களுக்கு தம்பதிகளின் மனதில் இருந்து அகலாது. இந்த பாடலுக்கு அஜித்தும், வித்யாபாலனும் காட்டியிருக்கும் அந்நியோன்யம் சிறப்பு. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு நீதிமன்ற காட்சிகளின் யதார்த்தத்தை கண்முன்னே நிறுத்துகிறது. கோகுல் சந்திரனின் படத்தொகுப்பால் எந்தவொரு காட்சியும் மந்தமான நிலை இல்லாமல் பார்த்து கொள்கிறது.
'சதுரங்க வேட்டை' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய இரண்டு ஆக்சன் படங்களுக்கு பின் ஒரு ரீமேக் படத்திற்கு திரும்பியுள்ள இயக்குனர் எச்.வினோத், அஜித்துக்காக இந்த படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்திருந்தாலும் ஒரிஜினல் படத்தின் தாக்கத்தை கனகச்சிதமாக வழங்கியுள்ளார். ஷராதா ஸ்ரீநாத் கேரக்டரின் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலி, கோபம் ஆகியவற்றை நம்பகத்தன்மையுடன் மிகைப்படுத்தாமல் காட்சிப்படுத்தியுள்ளார். நீதிமன்ற காட்சிகளில் அஜித்தின் கோபத்தை சரியாக அமைத்துள்ள வினோத், சில இடங்களில் அஜித்தின் உடல்மொழிகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அஜித், வித்யாபாலன் காட்சிகள், பாடல் ஆகியவை ஒரிஜினல் படத்தில் இல்லை என்றாலும் இந்த படத்தில் இந்த காட்சிகளின் இணைப்பு மெயின் கதையை பாதிக்காத வகையிலும் அஜித் ரசிகர்களை திருப்திபடுத்திவதிலும் வெற்றி கொண்டுள்ளார்.
மேலும் நீதிமன்ற இறுதிக்காட்சியில் சமூகத்திற்கு தேவையான ஒரு அழுத்தமான செய்தியை கூறியுள்ளார் இயக்குனர் எச்.வினோத். அஜித் பேசும் ஒவ்வொரு வசனமும் பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களுக்கான சாட்டையடி வசனங்கள். 'நோ என்றால் நோ' என்ற வசனம் மிகவும் அழுத்தமானது.
அஜித்தின் மாஸ் ஹீரோ இமேஜ், படத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஆகிய இரண்டும் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள போனிகபூருக்கு வசூல் மழையை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மொத்தத்தில் 'நேர் கொண்ட பார்வை' ஒரு நேர்மையான படைப்பு
Comments