close
Choose your channels

Nenjuku Needhi Review

Review by IndiaGlitz [ Friday, May 20, 2022 • தமிழ் ]
Nenjuku Needhi Review
Banner:
Zee Studios,
Cast:
Udhayanidhi Stalin, Aari, Tanya Ravichandran, Shivani Rajashekar, Yamini Chander, Suresh Chakravarthi, Ilavarasan, Mayilsamy,
Direction:
Arunraja Kamaraj
Production:
Boney Kapoor
Music:
Dhibu Ninan Thomas

நெஞ்சுக்கு நீதி - ஆழமாக பதிகிறது 

'கனா'வில் அறிமுகமான அருண்ராஜா காமராஜ், வணிக சினிமாவின் எல்லைக்குள் கிரிக்கட் விளையாட்டில் சாதிக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்ணையும் விவசாயிகளின் பிரச்சனைகளையும் ஒன்றிணைத்து இரண்டையுமே அழுத்தம்திருத்தமாக சொல்லி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக முதல் படத்திலேயே முத்திரை பதித்தார்.  அவரின் இரண்டாவது படத்துக்கு அவர் மேல் இருக்கும் எதிர்ப்பார்ப்பை தாண்டி இந்த படத்தின் மூல படைப்பான 'ஆர்டிக்கள் 15' ஹிந்தி படத்தின் தாக்கமும் இருப்பதால் வழக்கத்துக்கு மாறாக கவனம் ஈர்த்திருக்கிறது.  கலைஞரின் தலைப்பான நெஞ்சுக்கு நீதி அவர் பேரன் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.   

பொள்ளாச்சி ஸ்டேஷனில் உதவிக் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் (உதயநிதி ஸ்டாலின்) புதிதாக பணியமர்த்தப்படுகிறார். வெளிநாட்டில் அதிகம் வாழ்ந்த அவர்  முதலில் சந்திக்கும் சங்கடமே காவல்துறையினரிடையே காணப்படும் சாதியப் பாகுபாட்டால் பாதிக்கப்படும் கீழ் நிலை காவலர்கள் மற்றும் சுற்று வடடார மக்கள் . உயர் சாதியைச் சேர்ந்த உள்ளூர் இன்ஸ்பெக்டர் சுந்தரம் (சுரேஷ் சக்ரவர்த்தி) அந்தப் பகுதியில் உள்ள பணக்காரர்கள் மற்றும் ஊழல்வாதிகளுக்கு உதவி செய்பவர். அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த இரண்டு தலித் மைனர் சிறுமிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றனர், ஒருவர் காணவில்லை. அவர்கள் லெஸ்பியன்கள் என்றும், குடும்ப கவுரவத்தை நிலைநிறுத்துவதற்காக அவர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு அவர்களின் தந்தைகள் கைது செய்யப்படுகிறார்கள்.  பயிற்சி அரசு மருத்துவர் அனிதா (யாமினி சந்தர்) தனது ஆய்வில் அந்த சிறுமிகள் சித்திரவதை, கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து நெருக்கி கொல்லப்பட்டார்கள் என்பதை கண்டறிகிறார்.   ஆனால் சுந்தரம் மற்றும் அவரது அரசியல் முதலாளின் மிரட்டலால் அதை மறைக்க நேரிடுகிறது. தேடப்படும் நக்சலைட்டான குமரன் (ஆரி அர்ஜுனன்) காணாமல் போன சிறுமி தனது கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் விரைவான நீதிக்காக மறைந்திருந்து வன்முறை மூலம் முயற்சிக்கிறார்.  உயர் ஜாதியை சேர்ந்தவரானபோதும் விஜயராகவன் அந்த சிறுமிகளுக்கு நீதி பெற்றே தரவேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த வழக்கை நேரடியாக விசாரிக்க துவங்குகிறார்.   அதற்காக முதலில் காணாமல் போன சத்யாவைக் கண்டுபிடிக்க வேண்டும்.   ஹீரோ சிறுமியை  கண்டுபிடித்தாரா இல்லையா,  குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை நீதியின் முன் நிறுத்தினாரா இல்லையா என்பதே 'நெஞ்சுக்கு நீதி' படத்தின்  மீதி திரைக்கதை.  

விஜயராகவனுக்கு உயிர் கொடுக்க உதயநிதி ஸ்டாலின் தீவிர முயற்சி எடுத்து பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். சாதியால் பிளவுபட்ட சக ஊழியர்களிடம் வெறுப்பைக் காட்டுவது, நக்சலைட்டைப் பச்சாதாபத்துடன் கையாள்வது, உண்மையைத் தேடி கழிவுநீரில் குதிப்பது என அனைத்தையும் அடக்கி வாசித்தே மனதில் இடம்பிடிக்கிறார்.  நக்சலைட் குமரனாக ஆரி அர்ஜுனன் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறார் அவரின் முடிவுதான் சற்று உறுத்தல்.  சத்யாவின் மூத்த சகோதரியாகவும் குமரனின் காதலியாகவும் ஷிவானி ராஜசேகர் கச்சிதம்.   அரியலூர் அனிதாவிவுக்கு அஞ்சலி செலுத்தும் பாத்திரத்தில் யாமினி சந்தர் நன்றாக நடித்துள்ளார்.   உதையின் காதலியாக தன்யா ரவிச்சந்தர் தோன்றுகிறார்.  இளவரசு சில இடங்களில் குபீர் சிரிப்பை வழங்குகிறார்.  தாத்தா சொன்னதை அப்படியே கடைபிடிக்கும் மயில்சாமியும் கைதட்டல் பெறுகிறார்.   எல்லோரையும் தூக்கி சாப்பிடுவது யாரென்றால் அது சந்தேகமே இல்லாமல் நம்ம பிக் பாஸ் தாத்தா சுரேஷ் சக்ரவர்த்திதான். தாழ்த்தப்பட்ட மக்களைப் பார்க்கும்போது அவர் முகத்தில் காட்டும் வெறுப்பு, ஹீரோவுக்கு அவர் விடுக்கும் மறைமுக மிரட்டல்கள், கடைசியில் காம பிசாசாகவும் கொலைகாரனாகவும் மாறும்போது முகத்தில் தோன்றும் அரக்கத்தனம் என்று ரவுண்டு கட்டி அடித்து பின்னி பெடல் எடுத்திருக்கிறார்.  ஆண்டனி, ரமேஷ் திலக், ராட்சசன் சரவணன், ஷாயாஜி ஷிண்டே மற்றும் அப்துல் லீ ஆகியோரும் பொருத்தமான வேடங்களில் நடித்துள்ளனர்.

'நெஞ்சுக்கு நீதி' படத்தின் ஆக சிறப்பான விஷயம் படம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் வலுவான சமூகக் கருத்து,   அதில் பல பார்வையாளர்களையும் நோக்கி வீசப்பட்டு இலக்குகளை சிறப்பாக சென்றடைகின்றன.  படமுழுக்க அருண்ராஜாவின் கூர்மையான பேனாவிலிருந்து எழுந்த உரையாடல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக "தீட்டு" என்ற தமிழ் வார்த்தையின் அர்த்தத்தை கேள்விக்குள்ளாக்கி சிந்திக்க வைக்கிறது . கதாநாயகனை உயர் சாதியைச் சேர்ந்தவராக காட்டியதில் சமூக பொறுப்பும் நீதிக்காக போராடுவதிலும் ஒரு மனிதனின் குணமே முக்கியம் அவன் ஜாதி முக்கியம் இல்லை என்பதை ஓங்கி அறைந்தாற்போல் சொல்கிறது படம்.  ஜாதி ஒழிப்பில் முதலில் திருந்த வேண்டியவர்கள் காவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள்தான் என்பதை வலுவாக சொன்னதிலும் கவனம் ஈர்த்திருக்கிறார்கள். நாம் பிச்சைக்காரர்களுக்கு சாதாரணமாக கொடுக்கும் காசை சம்பள உயர்வாக கேட்டதற்காகத்தான் அந்த சிறுமிகள் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டார்கள் என்ற உண்மை நெஞ்சை பதைபதைக்க செய்கிறது.  

மைனஸ் என்று பார்க்க போனால்  கிரைம் த்ரில்லரா அல்லது சமூக சாடலா என்ற ரெட்டை குதிரை சவாரியில் திரைக்கதை சறுக்கியிருக்கிறது. குற்றவாளிகள் யார் என்பது உட்பட எந்த ஒரு திருப்பு முனையிலும் சுவாரசியம் பெரிதாக இல்லை.  திரைக்கதை ஓட்டத்திலும் ஆங்காங்கே தொய்வு விழுவதை மறுப்பதற்கில்லை.

திபு நினன் தாமஸின் பின்னணி இசை.  தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மற்றும் ரூபனின் படத்தொகுப்பு ஆகியவை சிறப்பு. அருண்ராஜா காமராஜ் ரீமேக்கிலும் தனது முத்திரையை பதிக்க தவறவில்லை   இந்த காலத்திற்கு உரக்க சொல்ல வேண்டிய ஜாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பை ஆணித்தரமாக பதிவு செய்ததற்காக அவரை வெகுவாக பாராட்டலாம்.

சமுதாயத்திற்கு தேவையான பல கருத்துக்களை ஆழமாக சொல்லும் நெஞ்சுக்கு நீதியை தாராளமாக பார்க்கலாம்.

Rating: 3 / 5.0

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE