சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால்: திரை முன்னோட்டம்

  • IndiaGlitz, [Thursday,November 02 2017]

வெண்ணிலா கபடிக்குழு', 'அழகர்சாமியின் குதிரை', 'பாண்டிய நாடு', 'ஜீவா' உள்பட பல தரமான வெற்றிப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த படம் தான் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. இந்த படத்தின் முன்னோட்டம் குறித்து தற்போது பார்ப்போம்

சந்தீப் கிஷான், மெஹ்ரின், விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். லட்சுமண் குமார் ஒளிப்பதிவில் காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படம் கடந்த தீபாவளி தினத்திலேயே வெளியாகவிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு தற்போது வரும் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் வித்தியாசமான டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதில் இருந்தே இந்த படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. 

இந்த படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது:

நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும். பாண்டிய நாடு போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது. இமான் அண்ணனோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். 

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி சென்டர் நாயகனாக சந்தீப் வருவார். ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம். ஆனால் அவர் நடிப்பின் மூலமாகவே அனைவரையும் உறையச் செய்ய முடியும். சந்தீப் என்ற மிக சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன். அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என்று கூறினார்.

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்ற 5 ரூபாய் டாக்டர் கேரக்டர் போலவே கோவையில் நிஜத்தில் 20 ரூபாய் டாக்டர் என்ற பெயரை பெற்றவர் டாக்டர் ராஜ கணபதி என்பவர். இவர் கடந்த ஆண்டு மரணம் அடைந்தபோது கோவை நகரமே கண்ணீர் விட்டது. இந்த நிலையில் சுசீந்திரனின் இந்த 'நெஞ்சில் துணிவிருந்தால்' படமும் மருத்துவம் சம்பந்தப்பட்ட படம் என்றும், அதனால் மறைந்த ஏழைகளின் டாக்டர் ராஜகணபதியின் குடும்பத்தினர்களை வரவழைத்து இந்த படத்தின் பாடல்களை இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அழுத்தமான மெசேஜ் இந்த படத்தில் இருப்பதாக படக்குழுவினர் கூறியிருக்கும் நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை வரும் 10ஆம் தேதி பார்ப்போம்