திருமணத்திற்கு பின் விக்னேஷ் சிவன் நண்பருக்கு தெரிவித்த முதல் வாழ்த்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 169’ படத்தின் டைட்டில் ’ஜெயிலர்’ என இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படம் தலைவரோட பெஸ்ட் படமாக இருக்கவேண்டும் என நெல்சனுக்கு பிரபல இயக்குனர் தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாக இருக்கும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியான டைட்டில் போஸ்டர் சமூக வலைதளத்தை ஸ்தம்பிக்கும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் வைரலாகிyஅ நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே அதிகமாகி உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் நெல்சனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‘வா நண்பா வா! தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் பெஸ்ட் படமாக இது இருக்கனும். உங்களின் மகத்தான அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தி வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன், அடுத்ததாக அஜித் நடிக்கவிருக்கும் ‘ஏகே 62’ படத்தை இயக்கவுள்ளார் என்பதும், விரைவில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.