டிக்டாக் லைக்ஸ்களுக்காக பூனையை தூக்கில் போட்டு வீடியோ எடுத்த வாலிபர் கைது!

  • IndiaGlitz, [Friday,May 22 2020]

டிக் டாக்கில் லைக்ஸ்கள் பெறுவதற்காக எந்த ரிஸ்க்கும் எடுக்க இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தயாராக இருப்பது டிக்டாக்கில் வெளிவரும் வீடியோக்களில் இருந்து தெரிய வருகிறது. இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் அதிக லைக்ஸ்கள் பெறுவதற்காக செல்லமாக வளர்த்த பூனையை தூக்கில் தொங்கவிட்டு வீடியோ எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

நெல்லை மாவட்டத்தில் உள்ள பழுவூர் என்ற பகுதியை சேர்ந்த தங்கதுரை என்ற இளைஞர் கடந்த சில மாதங்களாக டிக்டாக்கில் அதிக வீடியோக்களை பதிவு செய்து லைக்ஸ்களை எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு லைக்ஸ்கள் கிடைக்காததால் விபரீத முயற்சியில் இறங்க முடிவு செய்தார். இதனை அடுத்து தங்கள் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த பூனையை தூக்கில் தொங்க விட்டு அதனை வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ எடுத்து முடிப்பதற்குள் அந்தப் பூனை இறந்துவிட்டது

இந்த வீடியோ டிக்டாக்கில் அவர் எதிர்பார்த்தது போலவே பயங்கரமாக வைரலாகி லைக்ஸ்கள் குவிந்தது. ஆனால் அவருக்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களும் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மிருகவதை தடுப்பு பாதுகாப்பு இயக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நெல்லை போலீசார் தஙகதுரையை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

ஏற்கனவே டிக்டாக்கால் கலாச்சார கேடு ஏற்படுவதாகவும், பல்வேறு குற்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும் புகார்கள் வந்துள்ளன நிலையில் டிக்டாக்கின் தடை செய்ய வேண்டும் என்ற குரல் தற்போது ஓங்கி வருகிறது. இந்த நிலையில் நெல்லையைச் சேர்ந்த இளைஞர் லைக்ஸ்களுக்காக பூனையை தூக்கிலிட்டுக் கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது