ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன்: தற்கொலை செய்த நெல்லை மாணவரின் கடிதம்
- IndiaGlitz, [Wednesday,May 02 2018]
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்றும் தமிழகத்தில் மதுவினால் ஏராளமானோர் அடிமையாகியுள்ளதால் அவர்களது குடும்பம் பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும் தமிழக அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் நெல்லையை சேர்ந்த தினேஷ் என்பவர் தனது தந்தை மதுவுக்கு அடிமையாகியதால் ஏற்பட்ட விரக்தியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். மேலும் தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது மரணத்திற்கு பின்னராவது மதுபான கடைகளை அடைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் நான் ஆவியாக வந்து மதுபான கடைகளை ஒழிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குடிகார தந்தை தனக்கு கொள்ளி வைக்கவோ, மொட்டை போடவோ கூடாது என்றும் அவர் கொள்ளி வைத்தால் தனது ஆத்மா சாந்தி அடையாது என்றும் அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட மாணவர் தினேஷ் வரும் 6ஆம் தேதி நீட் தேர்வு எழுதவிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வருங்கால டாக்டரின் உயிர் அவரது தந்தையின் குடிப்பழக்கத்தால் பரிதாபமாக இவ்வுலகை விட்டு சென்றுள்ளது. மாணவர் தினேஷின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கைகளை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்