தந்தை இறந்த செய்தி தெரிந்தும், சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொண்ட பெண் ஆய்வாளர்: நெகிழ்ச்சி சம்பவம்
- IndiaGlitz, [Saturday,August 15 2020]
நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதும் இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியும், சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார்கள் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பாளையங்கோட்டையில் சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொள்ள வந்திருந்த பெண் ஆய்வாளர் ஒருவரின் தந்தை இறந்து விட்டதாக செய்தி தெரிந்தும் அவர் சுதந்திர தின விழா அணிவகுப்பை முடித்துவிட்டு அதன்பின்னர் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள சென்ற சம்பவம் பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நெல்லையில் சுதந்திர தின விழாவின் அணிவகுப்பில் இடம் பெற்றிருந்தவர்களில் பாளையங்கோட்டை ஆய்வாளர் மகேஸ்வரி என்பவரும் ஒருவர். ஆனால் நேற்றிரவே மகேஸ்வரியின் தந்தை இறந்த செய்தி அவருக்கு கிடைத்தது. தந்தையின் இறுதி சடங்கிற்கு செல்ல அவர் ஆயத்தமானபோது மகேஸ்வரிதான் அணிவகுப்பை தலைமையேற்று நடத்துவதால் அவர் அணிவகுப்பில் இருந்தே தீரவேண்டிய நிலை ஏற்பட்டதை உணர்ந்தார். இதனால் இன்று காலை 8 மணிக்கு அணிவகுப்பை சிறப்பாக நடத்தி முடித்துவிட்டு அதன்பின்னரே அவர் தனது தந்தையின் துக்க நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள சொந்த ஊர் புறப்பட்டுச் சென்றார். இந்த தகவல் காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களின் நாட்டுப்பற்றுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.