கல்வான் தாக்குதல் 4 ஆவது நாளாக தொடரும் பேச்சுவார்த்தை!!! தற்போதைய நிலவரம் என்ன???
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய எல்லைப் பகுதியில் கடந்த மே 5 மற்றும் 6 தேதிகளில் தொடங்கிய பதற்றம் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் இராணுவ மட்டத்தில் 12 முறை பேச்சுவாத்தைகள் நடத்தப்பட்டன. முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் இந்திய இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கடந்த ஜுன் 6 ஆம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அந்தப் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதற்குப்பின்பு இருநாட்டு படைகளும் எல்லையில் இருந்து படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டன.
அதோடு முடிந்தது என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கடந்த ஜுன் 15 ஆம் தேதி இரவு லடாக் பள்ளத்தாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இருநாட்டு வீரர்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரை இழக்கவும் நேர்ந்தது. சீனா சார்பிலும் 35 பேர் உயிரிழந்து இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது. ஆனால் சீனாவின் வெளியுறவுத் துறை இதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாள் 16 ஆம் தேதி இருநாட்டு இராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இராணுவ மேஜர் மட்டத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவு எட்டப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
அதற்குப்பின்பு 17 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்தியா தரப்பில் கடந்த ஜுன் 6 ஆம் தேதி போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்றும் இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து இருக்கிறது என்றும் ஜுன் 6 ஆம் தேதி இருநாடுகளும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின்படி தற்போது முடிவுகள் எட்டப்படலாம் எனவும் இராணுவ மட்டத்தின் உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
ஜுன் 17 ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவர் “இந்த சந்திப்பு மிகவும் பலனளித்தது. கடந்த மூன்று நாட்களாக நிலவிய முட்டுக்கட்டை உடைக்கப்பட்டது. இரு தரப்பினரும் சில விஷயங்களை ஒப்புக்கொண்டன. வரவிருக்கும் கூட்டங்களில் பல விஷயங்கள் தெளிவுபடுத்தப் படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறியிருக்கிறார். தற்போது (ஜுன் 19) இன்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இருநாட்டு இராணுவங்களும் இதுவரை படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதைக் குறித்து எந்த செய்தியையும் வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நேரத்தில் ஆஸ்திரேலிய நிறுவனம் (ஏஎஸ்பிஐ) ஒரு அதிர்ச்சியான தகவலையும் வெளியிட்டு இருக்கிறது. லடாக் பகுதியில் இருநாட்டு இராணுவமும் எந்த படைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ள வில்லை. மேலும், இருதரப்பினரும் தங்களது படைகளை முன்னோக்கிய நிலைகளிலேயே வைத்திருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் 1996, 2005 ஆம் ஆண்டு இருநாடுகளும் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தின் படி துப்பாக்கி எதுவும் பயன்படுத்தப் படவில்லை என்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இந்திய வீரர்கள் மாயமாகினர் என வெளியான தகவல்கள் உண்மையில்லை என்றும் விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout