ஏழைகள் ஏழைகளாகவே சாகவேண்டுமா? அனிதா மரணம் குறித்து சிவகுமார்
Send us your feedback to audioarticles@vaarta.com
நீட் தேர்வு காரணமாக தனது இன்னுயிரை நீத்து கொண்ட அனிதா குறித்தும், இன்றைய கல்விமுறை, நீட் தேர்வால் பாதிக்கப்படும் ஏழை மாணவர்கள் குறித்தும் நடிகர் சிவகுமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி மகன், ஒரு டாக்டர் மகள், ஒர் பேராசிரியர் மகள் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் எந்த அதிசயமும் இல்லை. மூட்டை தூக்கும் தொழிலாளி மகள் 1176 மதிப்பெண்கள் எடுப்பது இமாலய சாதனை. பத்தாயிரத்தில் ஒரு ஏழை பெண்ணால் மட்டுமே இதை சாதிக்க முடியும். குடிக்க நல்ல தண்ணீர் கிடையாது, உண்ண நல்ல உணவு கிடையாது, உடுத்த கெளரவமான உடை கிடையாது, படுக்க நல்ல பாய் கிடையாது. காடா விளக்கில் படித்து விடியும் முன்பும், இருட்டிய பின்பும் மட்டும் இயற்கை உபாதையை செடி கொடி மறைவில் ஒதுங்கி வாழும் அனிதா போன்ற பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பெரும் படிப்பு படிக்கக் கூடாதா?
டாக்டர், எஞ்சினியர், ஐ.ஏ.எஸ் கனவு காணக்கூடாதா? ஏழைகள் எத்தனை தலைமுறை ஆனாலும் ஏழைகளாகவே வெந்து நொந்து சாகவேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறதா? மாநில அரசின் கல்வித்திட்டத்தில் படிப்பவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கவே இந்த நீட் தேர்வு. சென்னையில் தனியார் பள்ளியில் லட்சங்கள் கல்விக்கட்டணமாக கட்டி படிக்கும் மாணவன் திறமையும் எட்டாம் வகுப்பு வரை தேர்வு என்றால் என்னவென்றே தெரியாமல் பின் 11ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவன் திறமையும் ஒன்றாக இருக்குமா? ஒரே நாடு சரி, ஒரே மொழி, ஒரே மதம் இந்தியாவில் சாத்தியமா?
நாடு முழுவதும் பல்வேறு தரத்தில் படிக்கும் மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து தயார் செய்யும் வரை நீட் தேர்வு இப்படி அப்பாவி அனிதாக்களை காவு வாங்குவதை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க போகிறோமா?
இவ்வாறு நடிகர் சிவகுமார் ஆவேசமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments