தமிழக அரசின் நிதியுதவியை வாங்க மறுத்த அனிதாவின் சகோதரர்கள்
- IndiaGlitz, [Monday,September 04 2017]
தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் குழப்பங்களால் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு கிடைக்கவில்லை. கடைசி வரை நீட் தேர்வு இந்த ஆண்டு இருக்காது என்று நம்பிக்கை அளித்த மத்திய, மாநில அரசுகள் கடைசி நேரத்தில் கைவிட்டன. நீட் தேர்வை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடியும் 1176 மதிப்பெண்கள் எடுத்த அனிதாவுக்கு நீதி கிடைக்கவில்லை. கடைசி நம்பிக்கையாக இருந்த சுப்ரீம் கோர்ட்டும் கைவிட்டதால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்ட்டார்.
இந்த நிலையில் அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவியும், அவருடைய குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து ரூ.7 லட்ச காசோலையை கொடுப்பதற்காக அனிதாவின் வீட்டிற்கு நேற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பிரியா அவர்கள் சென்றார்.
ஆனால் அனிதா சகோதரர்கள் அந்த பணத்தை வாங்க மறுத்துவிட்டனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை, காசோலையை வாங்க மாட்டோம், என ஆட்சியரிடம் அனிதா குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டடதை அடுத்து மாவட்ட ஆட்சியர் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். அனிதாவின் குடும்பத்தினர் வறுமையில் இருந்தும் ரூ.7 லட்சத்தை துச்சமாக மதித்து அனிதா போன்று இன்னொரு உயிரிழப்பு இழக்கக்கூடாது என்பதற்காக நீட் தேர்வை எதிர்ப்பதில் உறுதியாக இருப்பது உயிரிழந்த அனிதாவுக்கு செய்யும் உண்மையாக அஞ்சலியாக கருதப்படுகிறது.