நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவிக்கு தேசிய அளவில் 12வது இடம்
- IndiaGlitz, [Monday,June 04 2018]
மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று பிற்பகல் இந்த தேர்வின் முடிவுகள் வெளியானது. இந்த தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்று இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் அதற்கு முன்னரே இந்த தேர்வின் முடிவுகள் அவசர அவசரமாக வெளியிடப்பட்டது. இந்த தேர்வின் முடிவுகளை cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்
நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதியிருந்தனர். தமிழகத்தில் இருந்து மட்டும் சுமார் 1.03 லட்சம் மாணவ, மாணவிகளும் இந்த தேர்வை எழுதியிருந்த நிலையில் 45,336 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற மாணவி தமிழக அளவில் முதலிடத்தையும் தேசிய அளவில் 12வது இடத்தையும் பெற்றுள்ளார். இவர் 720 மதிப்பெண்களுக்கு 676 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தேசிய அளவில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனாகுமரி என்ற மாணவி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். அதேபோல் தெலுங்கானாவை சேர்ந்த ரோகன் புரோஹித் என்ற மாணவர் 690 மதிப்பெண்களுடன் 2ஆம் இடத்தையும், டெல்லியை சேர்ந்த ஹிமான்ஸ் சர்மா என்ற மாணவர் 690 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.