தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்; நீதிமன்றம் அதிரடி
- IndiaGlitz, [Tuesday,July 10 2018]
நீட் தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ வேண்டுமென்றே தமிழ் மாணவர்களை பழிவாங்குவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது மட்டுமின்றி வினாத்தாள்களை தமிழில் மொழி பெயர்ப்பதில் பல குளறுபடிகள் இருந்தது. எனவே தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
தமிழ் மொழியில் வினாத்தாள் தயாரிப்பதில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி ராஜ்யசபா உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த சிலநாட்களாக நடைபெற்ற நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறான 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் இந்த கருணை மதிப்பெண் வழங்கி 2 வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளாது. இந்த தீர்ப்பால் தமிழக மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த தீர்ப்பால் பல மாணவர்களுக்கு தங்களுடைய டாக்டர் கனவு நனவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.