நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு: சேலை, நகைகள், வளையல் அணிய மாணவிகளுக்கு தடை
- IndiaGlitz, [Saturday,May 06 2017]
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இந்தியா முழுவதிலும் 103 மையங்களில் சுமார் 11.35 லட்சம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதவுள்ளனர்.
தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் மத்திய அரசின் பிடிவாதம் காரணமாக இங்கும் நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 மையங்களில் சுமார் 88 ஆயிரம் மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதவுள்ளனர்.
நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த தேர்வில் மாணவர்கள் காலை 7.30 மணியில் இருந்தே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். மாணவர்கள் காலை 9.30 மணிக்கு மேல் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேர்வு எழுதுவதற்கான அனுமதி அட்டை காலை 9.45 மணி வரை சோதனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்க்கான கட்டுப்பாடுகள்: நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ-மாணவிகள் ஷூ, முழுக்கை சட்டை, டீ-சர்ட், பெல்ட், கைக்கடிகாரம், குளிர் கண்ணாடி, செயின், மோதிரம், பிரேஸ்லெட், நெக்லஸ், ஆபரணங்கள், கிளிப்புகள், பெரிய அளவு பட்டன்கள், பேட்ஜ், பெரிய அளவு ரப்பர் பேண்டுகள், சேலை, வளையல், பர்தா, தொப்பி, பைஜாமா, குர்தா ஆகியவை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமணமான பெண்கள் மட்டும் தாலி மற்றும் வளையல் அணிந்து கொள்ளலாம்.
அதேபோல் அரைக்கை சட்டை, செருப்பு, பேண்ட், ஜீன்ஸ் பேண்ட், மருத்துவர்கள் பரிந்துரைத்த கண் கண்ணாடி, லெக்கின்ஸ், சுடிதார், சிறிய அளவு ரப்பர் பேண்ட் ஆகியவற்றை மட்டுமே மாணவ, மாணவியர் அணிய வேண்டும்.
தேர்வு அறைக்குள் செல்போன், கைப்பை, கால்குலேட்டர், கேமரா, பென்டிரைவ், ஹெட்போன் ஆகிய எலக்ட்ரானிக் பொருட்களுக்கு அனுமதி இல்லை.