நீட், பேனர் மற்றும் ஆழ்துளையால் பலியான உயிர்கள்!
- IndiaGlitz, [Tuesday,October 29 2019]
தமிழகத்தில் ஒரு மரணம் ஏற்பட்டால் மட்டுமே ஒரு பிரச்சனை குறித்து அதிகமாக பேசும் வழக்கம் கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது
நீட் தேர்வு வேண்டாம் என தமிழகத்தில் உள்ள பலர் குரல் கொடுத்து வந்த போதிலும் அரசு காது கொடுத்து கேட்கவில்லை. ஆனால் அனிதா என்ற உயிர் போனபிறகு நீட் தேர்வு வேண்டாம் என தமிழக அரசும் விழித்தெழுந்து மத்திய அரசுக்கு கோரிக்கை அனுப்பியது இந்தக் கோரிக்கையும் நாளடைவில் கிடப்பில் போடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
அதேபோல் பேனர் கலாச்சாரத்தை நிறுத்த வேண்டும் என பல சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்தபோது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் சுபஸ்ரீ என்ற இளம்பெண்ணின் மரணத்திற்குப் பின்னரே அரசியல் கட்சிகளுக்கு திடீரென ஞானோதயம் ஏற்பட்டு இனிமேல் பேனர்களை பயன்படுத்த மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தனர். அதேபோல் திரை உலகில் மாஸ் நடிகர்களின் ரசிகர்களும் இதையே இதனையே கடைப்பிடித்தனர். ஆனால் அவர்கள் கொடுத்த உத்தரவாதம் காற்றில் ஒரு சில நாட்களில் பறக்கவிடப்பட்டு தற்போது மீண்டும் ஆங்காங்கே பேனர் கலாச்சாரம் தொடங்கியுள்ளது
இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றால் தற்போது சுஜித் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளான். இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மூடப்படாத ஆழ்துளைகளையும் மூட வேண்டும் என விழிப்புணர்வு ஏற்பட்டு, அரசும் பொதுமக்களும் வேகவேகமாக ஆழ்துளை கிணறுகளை மூடி வருகின்றனர். ஆனால் இதுவும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை. நாளடைவில் சுஜித்தின் மரணத்தை மறந்து மீண்டும் ஆழ்துளைகளை மூடாமல் விடும் பழக்கம் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் தான் ஏற்படுகிறது. ஒவ்வொரு முறையும் ஒரு உயிர் போனால் மட்டுமே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழக்கத்தை மாற்றி ஒரு உயிர் போன பின்னர் மீண்டும் அதே காரணத்திற்காக இன்னொரு உயிர் போகாமல் பார்த்து கொள்ள வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல, நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட....