நீட் அவசர சட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
- IndiaGlitz, [Tuesday,August 22 2017]
நீட் தேர்வில் இருந்து இந்த ஒரு ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அறிவித்துள்ளதை அடுத்து தமிழக மாணவர்களின் கனவு தகர்ந்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து இந்த ஒரு ஆண்டு மட்டும் விலக்கு பெற தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் அதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தெரிவித்தார். அதன்படி தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இந்த சட்டத்திற்கு மத்திய சட்டத்துறை ஒப்புதல் வழங்கினாலும், இன்று இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வழக்கில் நீட் தேர்வில் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு வழக்கறிஞர் அறிவித்தார்.
இதனை அடுத்து நீட் தேர்வில் விலக்கு கோரும் தமிழக அரசின் அவசர சட்டம் ஏற்கப்படாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட், தமிழகத்தில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வை நீட் தேர்வின் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும், கலந்தாய்வை வரும் செப்டம்பர் 4ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு அடிப்படையில்தான் தமிழகத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக தமிழக மாணவர்களும், பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.