ஆன்லைன் ரம்மி தடை குறித்து தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
- IndiaGlitz, [Thursday,November 05 2020]
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விளையாட்டால் பல இளைஞர்கள் தங்களது லட்சக்கணக்கான பணத்தை இழந்து, மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர் என்பதால் இந்த விளையாட்டைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் அடிக்கடி ஆன்லைன் ரம்மி காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டைத் தடை செய்வது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது.
அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசு லாட்டரி சீட்டை தடை செய்து கோடிக்கணக்கான குடும்பத்தை காப்பாற்றியது போல் தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பால் தமிழக இளைஞர்கள் பலர் காப்பாற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.