காலத்தை வென்ற எழுத்தாளரை இழந்துவிட்டோம்: கருணாநிதி மறைவு குறித்து நயன்தாரா
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதி நேற்று முன் தினம் மாலை 6.10 மணிக்கு காலமானதை அடுத்து நேற்றிரவு அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் 24 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது சமாதியில் நேற்று இரவு விடிய விடிய கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திரைத்துறைக்கு எண்ணற்ற பணியாற்றியுள்ள கருணாநிதிக்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். நேரில் அஞ்சலி செலுத்த முடியாதவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டு தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து கொண்டனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா, கருணாநிதியின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நம்முடைய வாழ்வில் மிகப்பெரிய இருண்ட 24 மணி நேர சோதனை இது என்று கூறலாம். சூரியனின் கதிர் ஒளியை நாம் இழந்து தவிக்கிறோம். ஒரு இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது.
காலத்தை வென்ற ஒரு எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை நாம் இன்று இழந்து வாடுகிறோம். தமிழகத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்துள்ளது. அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள், தொண்டுகள் கணக்கில் அடங்காது. அவர் ஆட்சியில் இருக்கும்போது புரிந்த சாதனைகள் யாராலும் மறக்க முடியாதவை. அவர் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வெளியூர் படப்பிடிப்பில் இருப்பதால் என்னால் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ள முடியவிலை. அதற்காக மிகவும் வருந்துகிறேன்'
இவ்வாறு நடிகை நயன்தாரா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments