ஒரு நல்ல படத்திற்கு புரமோஷன் தேவையில்லை. நயன்தாரா
- IndiaGlitz, [Wednesday,January 25 2017]
கோலிவுட்டின் லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் அழைக்கப்படும் நயன்தாராவின் நடிப்பு குறித்து இதுவரை யாரும் தவறாக விமர்சனம் செய்ததில்லை. ஆனால் அவர் மீது ஒரு பொதுவான குற்றச்சாட்டு உண்டு. அது அவர் தான் நடிக்கும் படத்தின் புரமோஷனுக்கு வரமாட்டார் என்பதுதான். இவ்வளவிற்கும் அவர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போதே புரமோஷனுக்கு வரமாட்டேன் என்று சொல்லித்தான் ஒப்பந்தமாகிறார். அப்படியிருந்தும் படம் வெளிவரும் நேரத்தில் நயன்தாரா மீது இந்த குற்றச்சாட்டை சில தயாரிப்பாளர்கள் எழுப்புவதுண்டு.
இந்நிலையில் இதுகுறித்து நயன்தாரா தற்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: இன்று எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. இந்த டிஜிட்டல் உலகில் நேரிலோ அல்லது தொலைக்காட்சிக்கோ சென்று புரமோஷன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படியிருந்தும் 'தனி ஒருவன்', 'மாயா' போன்ற படங்களை விளம்பரப்படுத்தியுள்ளேன். அதுமட்டுமின்றி என்னால் முடிந்த அளவுக்கு சிறிய படங்களை விளம்பரம் செய்தும் வருகிறேன்.
இது ஒருபுறம் இருந்தாலும், ஒரு படத்திற்கு நடிகைகள் விளம்பரம் செய்தால் மட்டும் அந்த படம் ஓடி விடாது. ஒரு மோசமான படத்தை 100 நாட்கள் விளம்பரம் செய்தாலும் ஓடாது, அதே போல் நல்ல கதை உள்ள படங்கள் யாரும் விளம்பரம் செய்யாமலேயே நன்றாக ஓடிவிடும்' என்று கூறி தன்மீதுள்ள விமர்சனத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.