உதவி இயக்குனராக மாறிய நயன்தாரா

  • IndiaGlitz, [Monday,April 24 2017]

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த சில வருடங்களாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் 'மாயா', 'டோரா'வை அடுத்து அவர் நடித்துள்ள மற்றொரு நாயகி சப்ஜெக்ட் திரைப்படம் 'அறம்'.

மாவட்ட கலெக்டர் கேரக்டரில் நயன்தாரா இந்த படத்தில் நடித்துள்ளதோடு அவர் கிட்டத்தட்ட உதவி இயக்குனர் வேலையையும் சேர்த்து பார்த்ததாக இந்த படத்தின் இயக்குனர் கோபி நயினார் கூறியுள்ளார். நயன்தாரா தன்னுடைய காட்சியின் படப்பிடிப்பு முடிந்தவுடன் கேரவனுக்கு சென்றுவிடாமல் தன்னுடைய காட்சி எப்படி வந்துள்ளது, மற்ற காட்சிகள் எவ்விதம் படமாக்கப்படுகிறது என்பதை ஆர்வமுடன் கவனித்து தனக்கு தோன்றிய ஆலோசனைகளையும் கூறியதாகவும், எனவே அவர் ஒரு உதவி இயக்குனராகவும் இந்த படத்தில் செயல்பட்டதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

முதன்முதலில் நயன்தாராவிடம் கதை கூறியபோது ஐந்தே நிமிடங்களில் கால்ஷீட் குறித்த விஷயங்களை அவர் பேச ஆரம்பித்துவிட்டதாகவும், அந்த அளவுக்கு அவருக்கு இந்த படத்தின் கதை பிடித்துவிட்டதாகவும் இயக்குனர் நயினார் கூறினார்.

நம் நாட்டில் நீர் ஆதாரங்கள் எந்த அளவுக்கு விலை போய்க்கொண்டிருக்கின்றது என்பதை மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்வதே இந்த படத்தின் நோக்கம் என்றும், 'வெள்ளை ரத்தம்' என்று கூறப்படும் தண்ணீருக்காக இன்று ஒவ்வொருவரும் தத்தளித்து கொண்டிருப்பது, தண்ணீருக்காக போராட்டம் நடத்துவது ஆகியவற்றை இப்போதுதான் மக்கள் உணர்ந்துள்ளதாகவும் இயக்குனர் மேலும் தெரிவித்தார்.