'அன்னபூரணி' சர்ச்சை.. 'ஜெய் ஸ்ரீராம்' என தொடங்கி நயன் தாரா வெளியிட்ட அறிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை நயன்தாரா நடித்த 'அன்னபூரணி' என்ற திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில் அதில் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய வசனம் இருந்ததை அடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் 'அன்னபூரணி' திரைப்படத்தை நீக்கிவிட்டது. இந்நிலையில் நயன்தாரா ஜெய் ஸ்ரீராம் என தொடங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
ஜெய் ஸ்ரீ ராம்... எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம். அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம்.
தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று. மற்றவர் உணர்வை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.
அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். 'அன்னபூரணி' படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல. எனது 20 ஆண்டுகால திரை பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான் அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக் கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்."
இவ்வாறு நடிகை நயன்தாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments