10 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால் ஒரு படத்தை முடக்கி விடலாமா? நயன்தாரா படத்தயாரிப்பாளர் ஆவேசம்
- IndiaGlitz, [Friday,June 14 2019]
கோடிக்கணக்கில் செலவு செய்து தயாரிக்கப்படும் ஒரு திரைப்படத்தை கடைசி நேரத்தில் ஒருசில ஆயிரங்கள் செலவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து படத்தின் ரிலீஸை நிறுத்திவிடும் கலாச்சாரம் கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ரிலீஸ் பரபரப்பில் இருக்கும் தயாரிப்பாளரிடம் முடிந்தளவு பணத்தை கறக்கலாம் என்று ஒரு கூட்டம் நடமாடி வருவதாக திரையுலகினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நயன்தாரா நடித்த கொலையுதிர்காலம்' திரைப்படம் இன்று வெளியாகவிருந்த நிலையில் நீதிமன்ற தடை காரணமாக வெளியாகவில்லை. பாலாஜி குமார் என்பவர் சுஜாதா எழுதிய 'கொலையுதிர் காலம்' என்ற நாவலை படமாக்க உரிமம் பெற்றிருப்பதால் அதே பெயரில் வெளியாகவுள்ள 'கொலையுதிர் காலம்' படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் 'கொலையுதிர் காலம்' படத்தின் தயாரிப்பாளர் இதுகுறித்து ஆவேசமாக கூறியபோது, 'ரிலீஸ் நேரத்தில் வழக்கு போடுவதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது. அவர்கள் திட்டமிட்டு இதுபோன்ற காரியங்களை செய்து வருகின்றனர். கொலையுதிர் காலம்' படத்திற்காக ரூ.12 கோடி செலவு செய்துள்ளேன். ஆனால் கடைசி நேரத்தில் ரூ.10 ஆயிரம் செலவு செய்து நீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். இந்த படத்தின் டைட்டில் குறித்து இரண்டு வருடங்களாக வழக்கு போட்டவருக்கு தெரியாதா? அப்போதே வழக்கு போட்டிருக்கலாமே? கடைசி நேரத்தில் வழக்கு போடுவது எந்த வகையில் நியாயம்? என்று ஆவேசமாக கூறியுள்ளார்.