நயன்தாராவின் 'அறம்': திரை முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதன்முதலில் மாவட்ட ஆட்சி தலைவர் கேரக்டரில் நடித்த படம், மீஞ்சூர் கோபி என்னும் கோபிநாயினார் இயக்கிய படம் என்ற வகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள 'அறம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முன்னோட்டத்தை தற்போது பார்ப்போம்
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் மூலம் இயக்குனராகும் கோபி நயினார் இந்த படம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியபோது, 'உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருப்பது தான் ’அறம்’. மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு பணியாற்றும் ஒரு மாவட்ட ஆட்சியரை மையமாக கொண்டு தான் கதை நகரும். எனவே தான் நாங்கள் படத்துக்கு ’அறம்’ என்று தலைப்பிட்டோம். ’மாவட்ட ஆட்சியர்’ என்ற வார்த்தைக்கு புதியதொரு அர்த்தத்தை தன்னுடைய அசாத்திய நடிப்பால் நயன்தாரா வழங்கியிருக்கிறார். இந்த திரைப்படம் மூலம் சமுதாயத்தில் ஒரு மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கின்றது' என்று கூறியுள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது.
குடிதண்ணீர் வசதி இல்லாத ஒரு கிராமத்துக்கு தண்ணீர் வசதி செய்து கொடுக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் நயன்தாராவின் நடவடிக்கையும் அதற்கு எதிராக கிளம்பும் பிரச்சனைகளை அவர் சமாளிக்கும் விதமும்தான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் போஸ்டர்களில் நயன்தாராவுக்கு பெரும்பாலும் ஒரே காஸ்ட்யூம் மட்டுமே உள்ளதால் இந்த படம் ஒரே நாளில் நடைபெறும் கதை என்றும் கூறப்படுகிறது.
பொதுவாக நயன்தாரா தான் நடித்த எந்த படத்தின் புரமோஷன்களிலும் கலந்து கொள்ளாமல் இருந்த நிலையில் இந்த படத்திற்காக தொலைக்காட்சி புரமோஷன்களும் செய்து வருவது இந்த படத்தின் கேரக்டரில் அவர் ஒன்றிவிட்டார் என்பதையே காட்டுகிறது.
இந்த படத்தின் இசை குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, '‘அறம்’ படத்தின் ஒலிக்கலவை பணிகளை முடித்தோம். அற்புதமான இந்த படத்தில் பங்காற்ற வைத்த இறைவனுக்கு நன்றி. இந்தியாவின் வளர்ச்சி அடையாத ஒரு பகுதியில் இருந்து வந்தவனாக, இந்த படத்துடன் என்னை நிறைய தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது. மக்கள் கேட்க வேண்டிய பிரச்சினைகளைப் பற்றி இந்த படம் பேசுகிறது. இது திரைக்கு வந்ததும், அதன் நோக்கம் நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்துக்கு நயன்தாரா உயிரூட்டியுள்ளார். அவருக்கும், இயக்குனர் கோபி, தயாரிப்பாளர் ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ், படத் தொகுப்பாளர் ரூபன், சண்டை பயிற்சியாளர் பீட்டர் கெய்ன் ஆகியோருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாரா முக்கிய கேரக்டர்களில் நடித்த 'மாயா', 'டோரா' படங்களை அடுத்து இந்த 'அறம்' வெளியாகவுள்ளதால் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் அவருடைய ரசிகர்களையும், நடுநிலை ரசிகர்களையும் திருப்திபடுத்தியதா? என்பதை வரும் 10ஆம் தேதி இந்த படத்தின் விமர்சனத்தில் பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com