நயன்தாராவின் படத்திற்கு 'அறம்' டைட்டில் ஏன்?
- IndiaGlitz, [Saturday,November 19 2016]
இன்று பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடியுள்ள நயன்தாரா நடிக்கும் 'அறம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கிற்கு அவரது ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர்.. இன்றைய சமூக வலைத்தளங்களில் நயன்தாரா தான் டிரெண்ட் என்ற அளவுக்கு இந்தபடம் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் 'அறம்' படக்குழுவினர் இந்த படம் குறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அறம் செய்ய விரும்பு என்று அவ்வை பாட்டியின் சொல்லை நாம் சிறுவயதிலேயே படித்திருக்கின்றோம். அறம் என்றால் தர்மம், நெறி என்று பொருள். காசு, பணம், பெயர், புகழ் ஆகியவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியை விட பல மடங்கு மகிழ்ச்சியும், நிம்மதியும், 'அறம்' செய்வதில் இருக்கின்றது என்ற உண்மையை புரிய வைக்கும் படம் தான் 'அறம்'
"உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் படம்தான் 'அறம்'. மக்களுக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்ற சிந்தனையோடு பணியாற்றும் ஒரு மாவட்ட ஆட்சியரை மையமாக கொண்டு நகரும் கதை என்பதால் இந்த படத்திற்கு 'அறம்' பொருத்தமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
'மாவட்ட ஆட்சியர்' என்ற வார்த்தைக்கு புதியதொரு அர்த்தத்தை தன்னுடைய அசாத்திய நடிப்பால் நயன்தாரா அவர்கள் வழங்கி இருப்பதாகவும் அறம் படத்தின் முதல் போஸ்டரை, அவர்களின் பிறந்த நாளன்று வெளியிட்டிருப்பது குறித்து பெருமைப்படுவதாகவும் இயக்குனர் கோபி நயனார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கிற்கே ரசிகர்கள் மாபெரும் வரவேற்பை கொடுத்திருப்பதை பார்க்கும்போது கண்டிப்பாக படத்திற்கு இதைவிட பலமடங்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.