ஓடிடியில் ரிலீஸாகும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திரைப்படம்?

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் திரைப்படம் ஒன்று ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இயக்குனர் இமயம் பாரதிராஜா, ‘தரமணி’ புகழ் வசந்த் ரவி உள்பட பலர் நடித்த திரைப்படம் ’ராக்கி’. அருள் மாதேஸ்வரன் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த படம் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜா இந்த படத்தில் ஒரு கேங்ஸ்டராக நடித்து உள்ளார் என்றும் அவருடைய கேரக்டர் படத்தில் முதுகெலும்பு போல் இருக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகிய இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவும் நாகூரான் படத்தொகுப்பும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.