ஊருக்கு உபதேசம் செய்து, 9 லட்சம் மின்கட்டணம் செலுத்தாத அமைச்சர்… நெட்டிசன்கள் கேலி!
- IndiaGlitz, [Saturday,July 03 2021]
பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும் அம்மாநில முன்னாள் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கு இடையே கடும் அரசியல் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்சேமிப்பு குறித்து முதல்வருக்கு ஆலோசனை கூறிய சித்து, அவரே கிட்டத்தட்ட 9 லட்சம் ரூபாய் மின்கட்டணம் செலுத்தாமல் இருக்கிறார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இருந்து வெளியேறிய நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் வெற்றிப்பெற்றார். மேலும் அமைச்சர் பதவி வகித்து வந்த அவர் சொந்த கட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதனால் மாநில முதல்வருக்கும் இவருக்கும் இடையே மோதல்போக்கு உருவாகியது. இதையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்த சித்து, தொடர்ந்து காங்கிரஸை விமர்சித்து வருகிறார்.
தற்போது மாநிலத்தில் காணப்படும் மின்நெருக்கடி குறித்து ஆலோசனை கூறிய சித்து, கடந்த ஆண்டு 17 லட்சம் ரூபாய் மின்கட்டணத் தொகையை நிலுவையில் வைத்து இருந்தார் என்றும் இதனால் இந்த வருடம் மார்ச் மாதம் 10 லட்சம் செலுத்தினார் என்றும் மீதம் அவருடைய பெயரில் 8.67 லட்சம் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
இந்தப் புகைப்படங்களைத் தொடர்ந்து சொந்தக் கட்சியை விமர்சித்த சித்து, ஊருக்கெல்லாம் உபதேசம் செய்து கடைசியில் அவரே இப்படி நடந்து கொள்கிறார் என் நெட்டிசன்கள் கடும் கேலி செய்து வருகின்றனர்.