Download App

Navayuga Kannagi Review

நவயுக கண்ணகி: ஜாதி வெறியர்களுக்கு சரியான சாட்டையடி

தனது கணவன் கோவலனை கொலை செய்ததற்காக மதுரையை எரித்தாள் கண்ணகி என்று புராணம் கூறிய நிலையில் கற்புக்கரசி என்றால் உடனே கண்ணகி என்று கூறும் நிலையில், கண்ணகி குறித்து பெரியார் ’ஒரு தவறான மனிதனுக்காக  வக்காலத்து வாங்கிய கண்ணகி ஒரு முட்டாள்’ என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில்  ’நவயுக கண்ணகி’ திரைப்படத்தில் ஜாதி வெறி பிடித்த மனிதர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் ஒரு சராசரி பெண் என்ன செய்தார் என்று இயக்குனர் கிரண்  துரைராஜ்  கூறும் உண்மை கதை தான் ‘நவயுக கண்ணகி.

நாயகியின் முதல் இரவில் இருந்து கதை தொடங்குகிறது. கணவர் தன்னை நெருங்கும் போது தன்னுடைய காதலனுடன் நெருக்கமான உறவில் இருந்தது ஞாபகம் வர கண்ணீர் வடிக்கிறாள் நாயகி. உடனே கணவர் அதிர்ச்சி அடைந்து  என்ன என்று கேட்க அவர் தனது பிளாஷ்பேக்கை கூறுகிறார்.

நாயகி உயிருக்கு உயிராக ஒருவரை காதலித்த நிலையில் தனது தந்தையிடம் தனது காதல் குறித்து கூறுகிறார். தந்தை ஒப்புக்கொண்டதால் மகிழ்ச்சி அடைந்து காதலனின் விவரங்களை தந்தையிடம் கொடுக்க, அதன் பிறகு தந்தையின் சுயரூபம் வெளிப்படுகிறது. காதலனை கட்டி வைத்து உதைத்து என் மகளை மறந்துவிடு என்று நாயகியின் தந்தை மிரட்டுகிறார். ஆனால் காதலன் மறுத்துவிட,  நாயகி ’நான் அவருக்கு சொல்லி புரிய வைக்கிறேன் என்று கூறி தந்தையிடம் கெஞ்சி அனுமதி வாங்கி காதலனுடன் பேசுகிறார்.  என்னை பார்த்துக் கொள்ள இன்னொருவர் கிடைப்பார், ஆனால் உன்னுடைய அம்மாவை பார்த்துக் கொள்ள உன்னை விட்டால் வேறு யாரும் கிடையாது,  எனவே என்னை மறந்து விட்டு, நீ உன்னுடைய உயிரை காப்பாற்றிக்கொள்’ என்று கூறுவார். ஆனால் நாயகன்  காதலில் பிடிவாதமாக இருக்க, நாயகியின் தந்தை மற்றும் மாமாக்களால் அவர் கொலை செய்யப்படுகிறார்.

இந்த கதையை தனது கணவனிடம் நாயகி கூறிய போது  அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தான் இறந்த நாயகனின் நண்பர்கள்  ஒரு அதிர்ச்சி செயலை செய்கின்றனர். நாயகனின் உடலில் இருக்கும் விந்தணுவை எடுத்து அதில் உயிர் இருக்கிறது என்பதையும் உறுதி செய்து, நாயகியிடம் கொடுக்கின்றனர். நாயகி அதை பயன்படுத்தி கர்ப்பமாகிறாள்.  முதலிரவு நடக்காமலேயே தனது மனைவி கர்ப்பம் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த கணவனிடம் இந்த உண்மையை நாயகி கூறுகிறாள். அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை.  

நாயகியின் தந்தை மற்றும் அவருடைய மாமாக்கள், நாயகனை கொலை செய்யும் போது பேசும் வசனங்கள், குறிப்பாக புரட்சிகரமான வார்த்தை என்று சொல்லப்படும் ஜெய்பீம் என்பது  ஜாதி வெறியர்களால் பயன்படுத்தப்பட்ட விதம், அதன் பின்னர் கிளைமாக்ஸில் பயன்படுத்திய விதம் என இயக்குனர் தனது புத்திசாலித்தனத்தை காட்டியிருக்கிறார்.

‘கண்ட கண்ட நாய்ங்க வாரிசுங்க எல்லாம் என் வம்சத்துல பிறக்கணுமா? என ஜாதி வெறி பிடித்த நாயகி தந்தை கூறிய வசனத்தை  கிளைமாக்ஸில் நாயகியின் வளைகாப்பு நிகழ்ச்சியின்போது பயன்படுத்தியிருப்பது சூப்பர்.  ‘உங்களையெல்லாம் வைக்கிற இடத்தில் வைக்கணும்டா, நாலு எழுத்து படிச்சுட்டா தராதரம் மாறிடுமா’ என்று நாயகியின் தந்தை பிற்போக்குத்தனமாக பேசும் வசனம், இந்த 21ஆம் நூற்றாண்டிலும் ஜாதி வெறி பிடித்த மனிதர்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.

இந்திய கலாச்சாரத்தில் ஒரு தலையாட்டி பொம்மையாகத்தான் பெண்களை இருக்க செய்கிறார்கள் என சொல்வதற்கு அடிக்கடி தலையாட்டி பொம்மையை இயக்குனர் காட்டுவது, பெண் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்பதை சொல்லும் காட்சி படத்தின் ஹைலைட்டாக உள்ளது

’அப்ப உனக்கு குழந்தை பிரச்சனை இல்லை.. அவன்கூட படுத்ததுதான் பிரச்சனை.. ஜாதி பார்த்து கல்யாணம் பண்ணிகிட்டு, வாழ்க்கை கொடுக்குறானாம் மயிரு’ என்ற வசனம், கத்தியின்றி ரத்தமின்றி ஜாதிவெறி பிடித்த தந்தை மற்றும் கணவனை பழிவாங்கும் வித்தியாசமான கண்ணகியாக இந்த நவயுக கண்ணகி இருக்கிறாள். மொத்தத்தில்  ஜாதி வெறியர்களுக்கு இந்த படம் ஒரு சரியான பாடமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Rating : 2.8 / 5.0