நவரசா: அரவிந்த்சாமி இயக்கத்தில் 'ருத்ரா' பெண்ணின் பெருமையை கூறிய அரவிந்த்சாமி
- IndiaGlitz, [Friday,August 06 2021]
மணிரத்னம் தயாரிப்பில் உருவான ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தின் அடுத்த பகுதியான’ரௌத்திரம்’ என்ற பகுதியின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
கதையின் ஹீரோவான ஸ்ரீராம் தனது தங்கை மற்றும் தாயாருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். குடும்பத்தில் வறுமை இருந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. இந்த நிலையில் வாடகை தரவில்லை என ஹவுஸ் ஓனர் வீட்டில் கரண்ட் கட் செய்து விடுகிறார். கால்பந்து விளையாடச் சென்ற இடத்தில் ஒரு ஷூ கூட இல்லாமல் விளையாட வராதே என சக மாணவர்கள் ஸ்ரீராமை கேலி செய்கின்றனர். தனக்குத் திருமணம் நடக்குமா என்ற சந்தேகத்தை ஸ்ரீராமின் தங்கை எழுப்புகிறார்
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் காசு வாங்கி வருகிறேன் என்று அவரது தாயார் செல்கிறார். அதேபோலவே அவர் காசு வாங்கிகொண்டு வந்தவுடன் குடும்பம் மகிழ்ச்சியாக மாறுகிறது. இந்தநிலையில் ஒரு சந்தர்ப்பத்தில் ஸ்ரீராம் தனது அம்மாவுக்கு எப்படி காசு கிடைத்தது என்பது தெரிய வந்தவுடன் அவர் அதிர்ச்சி அடைகிறார். இதனையடுத்து அவர் ஒரு கொலை செய்கிறார்
அதேபோல் அவரது தங்கைக்கும் அம்மாவின் ரகசியம் தெரிய வருகிறது. அவரும் தனது அம்மாவை இனிமேல் பார்க்க மாட்டேன் என்ற பிடிவாதத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் ஸ்ரீராம் மற்றும் அவரது தங்கை வளர்ந்தவுடன் என்ன நடக்கின்றது என்பதுதான் இந்த பகுதியின் மீதிக்கதை
இந்த கதையில் இடையிடையே காவல்துறை அதிகாரியாக வரும் ரித்விகா கடைசியில் இந்த கதையில் எப்படி இணைகிறார் என்பதை இயக்குனர் அரவிந்த்சாமி மிக அழகாக காட்டியிருக்கின்றார். ஏ.ஆர்.ரஹ்மானின் அபாரமான பின்னணி இசை மற்றும் அரவிந்த்சாமியின் வசனம், இயக்கம் தான் ஹைலைட்.
குறிப்பாக பெண் என்பவர் தங்கம் மாதிரி, தங்கம் போலவே பெண்ணையும் பயன்படுத்துவார்கள், உரசுவார்கள், சில நாட்கள் கழித்து அடுத்தவரிடம் கொடுத்துவிடுவார்கள். தங்கத்தை எப்படியெல்லாம் வளைப்பார்களோ அதேபோல் பெண்ணையும் வளைத்துக் கொள்வார்கள் என்று கூறும் தாயார் வசனமும், ஆனால் பெண் என்பவர் தங்கம் மாதிரி இருக்கக்கூடாது என்று கூறப்படும் மகளின் வசனமும் மிக அருமை!