நவரசா: வசந்தின் 'பாயாசம்' அதகளப்படுத்திய டெல்லி கணேஷ்
- IndiaGlitz, [Friday,August 06 2021]
நவரசம் ஆந்தாலஜி தொடரின் இன்னொரு பகுதி ‘பாயாசம்’. டெல்லி கணேஷ், ரோஹினி, உள்பட ஒருசிலர் நடித்துள்ள இந்த தொடரை இயக்குனர் வசந்த் இயக்கியுள்ளார். 1965 ஆம் ஆண்டு கதை நடப்பது போன்று இந்த பகுதி உருவாக்கப்பட்டுள்ளது
இந்த கதையின் நாயகனாக டெல்லி கணேஷ் நடித்துள்ளார். ஒரு கிராமத்து முதியவராக டெல்லி கணேஷ் நடித்துள்ளார் என்று சொல்வதைவிட கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார் என்று சொல்லலாம். இந்த கேரக்டரில் டெல்லிகணேஷ் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இந்த அளவுக்கு துல்லியமாக இந்த பகுதி உருவாகி இருக்காது என்பதுதான் உண்மை.
அதேபோல் ரோகிணியின் கதாபாத்திரமும் மிக அருமை. தனது அனுபவ நடிப்பின் மூலம் தனது கேரக்டரை உணர்ந்து நடித்துள்ளார். டெல்லி கணேஷின் விதவை மகளாக அதிதி பாலன் நடித்துள்ளார். இவரது காட்சிகள் மிகக் குறைவு என்பது ஏமாற்றமாக உள்ளது. அதிதியை இன்னும் கொஞ்சம் இயக்குனர் வசந்த் பயன்படுத்தி இருக்கலாம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இருப்பினும் டெல்லி கணேஷ் மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து கொண்டு கதையை நிறுத்தி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக அருமையான ஒளிப்பதிவு. படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லொகேஷன்கள் மிக அருமை. ஒவ்வொரு பிரேமிலும் ஒளிப்பதிவாளரின் நேர்த்தி மற்றும் துல்லியம் தெரிகிறது. குறிப்பாக கும்பகோணத்தின் அழகை இதைவிட அருமையாக இதற்கு முன் வேறு படங்களில் பார்த்து இருக்கின்றோமா? என்பது சந்தேகமே. ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை கூடுதல் பலம். 30 நிமிடங்களில் இயக்குனர் வசந்த் தனது திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தி ஒரு அருமையான குறும்படத்தை உருவாக்கியுள்ளார். மொத்தத்தில் ‘பாயாசம்’ பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் வைக்கும் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.