Download App

Natpuna Ennanu Theriyuma Review

நட்புன்னா என்னன்னு தெரியுமா: ஜாலியான நட்பு

விஜய் டிவி தொடர்கள் மூலம் பிரபலமாகி ஒருசில படங்களில் சின்னச்சின்ன கேரக்டர்களில் நடித்த கவின், 'நட்புன்னா என்னன்னு தெரியுமா? படத்தின் மூலம் ஹீரோவாகியுள்ளார். முழுக்க முழுக்க காமெடி களத்தில் வெளிவந்துள்ள இந்த நட்பு படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்

கவின், ராஜூ, அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் ஒரே நாளில் பிறந்து, ஒன்றாக வளர்ந்து ஒரே பள்ளியில் படித்து நட்பாக இருப்பவர்கள். எந்த வேலையும் கிடைக்காமல் ஊரை சுற்றி பெற்றோர்களாலும் சுற்றத்தார்களாலும் திட்டு வாங்கும் மூவரும் பிசினஸ் தொடங்க முடிவு செய்து, சிலபல பிரச்சனைகளுக்கு பின் ஒரு வழியாக வாழ்க்கையில் செட்டில் ஆகின்றனர். இந்த நேரத்தில் ரம்யா நம்பீசன் திடீரென குறுக்கிட்டு மூவரின் நட்பு உடைய காரணமாகிறார். பிறந்ததில் இருந்தே நட்புடன் இருக்கும் மூவரும் பிரிய என்ன காரணம்? மீண்டும் இணைந்தார்களா? ரம்யா நம்பீசன் நிலை என்ன என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை

கவின் தான் ஹீரோ. நண்பர்களுடன் சேட்டை, காமெடி, காதலியுடன் டூயட், என ஜாலியான நடிப்பு. சீரியல் அனுபவம் கைகொடுத்துள்ளது. நடனத்திலும் ஓகே. 

அறிமுக நடிகர் ராஜூவுக்கு கவினை விட நடிக்க நல்ல வாய்ப்பு. தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்து நண்பனுடன் மோதும் காட்சிகளில் ஒரு புதுமுக நடிகர் போலவே தெரியவில்லை. அதேபோல் அருண்ராஜா காமராஜ் டைமின் காமெடி ரசிக்க வைக்கின்றது. கிளைமாக்ஸ் காட்சிக்கு முந்தைய காட்சியில் கவினுடன் பேசும் ஒரு சீரியஸான வசனத்தின்போதும் கைதட்டல் பெறுகிறார். ஆனாலும் 'கனா' படம் வெளிவந்த பின்னர் இவர் மீது ஒரு பெரிய மரியாதை மனதில் உள்ளது. அப்படிப்பட்டவரை ஒரு ஏமாளி காமெடியனாக பார்க்கத்தான் கொஞ்சம் நெருடுகிறது.

நாயகி ரம்யா நம்பீசன் கொஞ்சம் லேட்டாக கதைக்குள் வந்தாலும் இரண்டாம் பாதி முழுவதும் அவரை சுற்றித்தான் கதை நகர்வதால் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. அவரும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். 

இளவரசு, மன்சூர் அலிகான், ரமா, சுஜாதா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர்களுக்கு குறைவான காட்சிகள் என்றாலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளனர்.

தரணின் பாடல்களில் ஈர்ப்பு இல்லை. ஆனால் பின்னணி இசை ஓகே. யுவாவின் கேமிரா மற்றும் நிர்மல் படத்தொகுப்பு ஓகே ரகம்.

மூன்று நண்பர்கள் ஒரு பெண் என்ற நான்கு கோண காதல் கதையை காமெடியாகவும் கொஞ்சம் சீரியஸாகவும் சொல்ல முயற்சித்துள்ளார் அறிமுக இயக்குனர் ஷிவா அரவிந்த். ஆனால் காமெடி ஒர்க் அவுட் ஆன அளவுக்கு சீரியஸ் எடுபடவில்லை. காமெடிக்கான சரியான களமிருந்தும் அதை இயக்குனர் பாதியளவு தான் பயன்படுத்தியுள்ளார். இந்த படத்தில் உள்ள கிட்டத்தட்ட எல்லா கேரக்டர்களும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். விஷ பாட்டிலுக்கே படத்தின் ஒரு பட்ஜெட் ஒதுக்கப்பட்டுருக்குமோ? 

நண்பர்களின் பிரிவிலும், மீண்டும் இணைவதிலும் ஒரு செயற்கைத்தனம் தெரிகிறது. இருப்பினும் இரண்டாம் பாதியை சலிப்பின்றி தனது கலகலப்பான திரைக்கதையின் மூலம் படத்தை கொண்டு சென்று சின்ன சின்ன டுவிஸ்டுகளையும் வைத்து கிளைமாக்ஸில் பார்வையாளர்களை திருப்தியுடன் வெளியே அனுப்புகிறார். 

மொத்தத்தில் ஒரு ஜாலியான நட்பு, காமெடி, காதல் கலந்த ஒரு படம்

Rating : 2.5 / 5.0