Natpe Thunai Review
நட்பே துணை : ஹாக்கிக்கு மரியாதை!
ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த 'மீசையை முறுக்கு' திரைப்படம் நல்ல வெற்றி கொடுத்த உற்சாகத்தில் அவர் நடித்துள்ள இரண்டாவது படம் தான் 'நட்பே துணை'. ரிலீசுக்கு முன்னர் நல்ல புரமோஷன், பாடல்கள் ஹிட் ஆகியவை இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்
பாண்டிச்சேரி கடலோரத்தில் ஒரு விளையாட்டு மைதானம் உள்ளது. அந்த ஊரில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு அந்த மைதானம் தான் கோவில் மாதிரி. இந்த நிலையில் அந்த மைதானத்தை கைப்பற்றி அதில் ஒரு மருந்து தொழிற்சாலை அமைக்க ஒரு கார்ப்பரேட் நிறுவனம் முயற்சிக்கின்றது. மத்திய அமைச்சர் முதல் லோக்கல் அரசியல்வாதி வரை அந்த மைதானத்தை கைப்பற்ற முயற்சி எடுக்கும்போது ஹீரோவும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து அந்த மைதானத்தை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை
முதல் பாதி முழுவதும் நண்பர்களுடன் ஜாலியாக உலாவரும் ஒரு இளைஞராக, நாயகியை சுத்தி சுத்தி லவ் பண்ணும் பிளேபாயாக நடித்துள்ளார். இடைவேளைக்கு பத்து நிமிடங்களுக்கு முன் திடீரென ஹாக்கி பிளேயர் ஆகிறார். அதன்பின் இரண்டாம் பாதியில் காதலை மறந்துவிட்டு முழுக்க முழுக்க ஹாக்கி பிளேயராகவே நடித்துள்ளார். ஆதி நடிப்பில் தனது ரசிகர்களை திருப்தி செய்துள்ளார்.
நாயகி அனகாவும் ஹாக்கி பிளேயர்தான். ஆனால் ஆதியுடன் ஒரே ஒரு காட்சியில் மட்டும் ஹாக்கி விளையாடிவிட்டு பின்னர் படம் முழுவதும் பார்வையாளராகவும், பாடலுக்கு டான்ஸ் ஆடுபவராகவும் நடித்துள்ளார்.
அமைச்சர் கேரக்டரில் நடித்துள்ள கரு.பழனியப்பன் இன்றைய அரசியல்வாதிகளை அப்படியே நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். நல்ல அரசியல்வாதிகளை மக்கள் தேர்ந்தெடுப்பதில்லை என்று மக்களை குற்றஞ்சாட்டுகிறார். கிட்டத்தட்ட ஒரு மினி 'அமைதிப்படை' அமாவாசையாக நடித்துள்ளார். இயல்பான நடிப்பு
ஹாக்கி டீம் கோச் கேரக்டரில் நடித்திருக்கும் ஹரிஷ் உத்தமன் நடிப்பு சூப்பர். ஒரு பிரச்சனை என்று வரும்போது கோபத்தை காட்டாமல், கோபத்தை எங்கு, எப்போது, எப்படி காட்ட வேண்டும் என்று வீரர்களுக்கு புரிய வைக்கும் காட்சி சூப்பர்.
கெளசல்யா, பாண்டியராஜன் ஆகியோர்களுக்கு சின்ன கேரக்டர்கள். மனதில் பதியும் வகையில் ஒரு காட்சி கூட இவர்களுக்கு இல்லை. ஆர்ஜே விக்னேஷ்வரன் நல்ல வேளையாக இந்த படத்தில் அடக்கி வாசித்துள்ளார். செண்டிமெண்ட் ஆகவும் மனதை தொடுகிறார்
மற்றபடி யூடியூபில் பிரபலமானவர்கள் அனைவரும் இந்த படத்தில் உள்ளனர். பல காட்சிகளில் இவர்கள் ஆதியை டாமினேட் செய்வதுள்ளதை அனுமதித்ததே பெரிய விஷயம்தான்
ஹிப் ஹாப் ஆதியின் பாடல்கள் வழக்கம்போல் பாடல் வரிகள் புரியாமல் ஸ்பீடாகவும் கொஞ்சம் இரைச்சலாகவும் உள்ளது. கேரளா பாடலும் அந்த பாடல் படமாக்கப்பட விதம் ஓகே. பின்னணி இசை ஆதி தன் முழு திறமையும் காண்பித்துள்ளார்.
இந்த படத்தின் கிரியேட்டிவ் இயக்குனராக ஆதியும், இயக்குனராக பார்த்திபன் தேசிங்கும் பணிபுரிந்துள்ளனர். முதல் பாதியின் பெரும்பாலான காட்சிகள் காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நாயகன், அவரை சுற்றி இரண்டு நண்பர்கள், நாயகியை பார்த்தவுடன் காதல், முதலில் நாயகனுடன் மோதல் பின் காதல் என ஆதிகாலத்து ஃபார்முலா தான் இந்த படத்திலும் உள்ளது. இடைவேளைக்கு முந்தைய பத்து நிமிட காட்சிகள் சூப்பர் என்றாலும் ஒரு தேசிய அளவிலான ஹாக்கி வீரர் ஒருவரை, கோச் உள்பட யாருக்குமே தெரியாமல் இருப்பது காதில் டன் கணக்கில் சுற்றும் பூ. சச்சினை யார் என்றே தெரியாத ஒரு கிரிக்கெட் வீரர் இருப்பாரா? அதுபோல் தான் உள்ளது அந்த காட்சி
இரண்டாம் பாதியில் விளையாட்டில் அரசியல், அட்வைஸ், அரசியல்வாதிகளின் சூழ்ச்சி என அரைத்த மாவு அரைக்கப்பட்டு கடைசி இருபது நிமிடங்கள் மீண்டும் படத்தை ஓரளவு தூக்கி நிறுத்துகிறது. பெரும்பாலானோர் மறந்துபோன இந்தியாவின் தேசிய விளையாட்டை கதைக்களமாக தேர்வு செய்த படக்குழுவுக்கு பாராட்டுக்கள்
மொத்தத்தில் இடைவேளைக்கு முந்தைய பத்து நிமிடங்கள், கிளைமாக்ஸ் இருபது நிமிடங்கள், கரு.பழனியப்பனின் யதார்த்தமான நடிப்பு ஆகியவற்றுக்காக இந்த படத்தை பார்க்கலாம்
- Read in English