நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு: பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Tuesday,March 24 2020]
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் சற்றுமுன் உரையாற்றிய பிரதமர் மோடி, ‘இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் தவிர மற்ற யாருக்கும் ஊரடங்கின் போது அனுமதியில்லை என்றும், ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம் என்பதால் இந்த ஊரடங்கிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவை சமாளிக்க சமூக விலகல் ஒன்றுதான் ஒரே தீர்வு என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் ஊரடங்கில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றீர்கள், ஒவ்வொரு இந்தியனாலும் அது வெற்றி பெற்றது அதேபோல் இந்த ஊரடங்கிற்கும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூக விலகலே கொரோனாவை விரட்டி அடிப்பதற்கான ஒரே வழி என்றும் அதைத் தவிர வேறு எந்த பாதுகாப்பு வழிகளும் இல்லை என்று கூறிய பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்தியருக்கும் பொறுப்பு உள்ளதால் கொரோனா நம்மை தாக்காது என்று யாரும் நினைக்கக் கூடாது என்றும், பெரியவர்கள், வியாபாரிகள், குழந்தைகள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.