கடவுளுக்கு இணையான சேவைக்கு ஒரு சல்யூட்… மருத்துவர்கள் தினம் உருவான வரலாறு!
- IndiaGlitz, [Thursday,July 01 2021]
கடவுளுக்கு ஈடாக ஒரு மனிதனுக்கு நாம் மதிப்பு கொடுக்கிறோம் என்றால் அது மருத்துவராகத்தான் இருக்க வேண்டும். இத்தனை மதிப்பு கொண்ட மருத்துவர்களின் தினம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 1 ஆம் தேதி கடைப்பிடிக்கப் படுகிறது. இந்தத் தினத்தில் அவர்களின் எதிர்பார்ப்பில்லா சேவை மனப்பான்மைக்கு நாம் நன்றி தெரிவித்து வருகிறோம்.
கொரோனா நேரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களின் சேவை மனப்பான்மையை ஒவ்வொரு பாமர மனிதனும் உணர்ந்து கொண்டுள்ளான். அதிலும் இந்தக் குழுவிற்கு தலைமை வகித்து, நாட்டு மக்களை காப்பாற்றுவது ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ள மருத்துவர்களுக்கு சிறப்பு செய்வது நம்முடைய கடமை என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் மருத்துவர்கள் தினம் உருவான வரலாற்றையும் அறிந்து கொள்வது அவசியம்.
ஏழைகளுக்கு தனது வீட்டையே மருத்துவமனையாக மாற்றிக் கொடுத்தவர், முதலமைச்சராக உயர்ந்த போதும் ஏழைகளுக்கு ஓயாது இலவச மருத்துவத்தை வழங்கியவர், மாகாத்மா காந்திக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர், நாட்டு விடுதலைக்காகப் போராடியவர், தேசிய காங்கிரஸின் தலைவர் இப்படி பல பெருமைகளைக் கொண்ட பி.சி.ராய் அவர்களின் பிறந்த தினத்தையே கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறோம்.
மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராக பொறுப்பு வகித்த பி.சி.ராய் ஒரு மருத்துவர் என்பது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். அவருடைய பிறந்த தினத்தைத்தான் மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறோம் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மார்ச் 30 ஆம் தேதி மருத்துவர்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பி.சி.ராய் அவர்களுக்கு சிறப்பு செய்வதற்காக நாம் ஜுலை 1 ஆம் தேதி மருத்துவர்கள் தினம் கொண்டாடி வருகிறோம்.
மேலும் மருத்துவ பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த 1976 முதல் பி.சி.ராய் பெயரில் விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1882 ஆம் ஆண்டு ஜுலை 1 ஆம் தேதி பிறந்த பி.சி.ராய் மருத்துவத்துறையில் அர்ப்பணிப்போடு பணியாற்றி கடந்த 1962 ஆம் ஆண்டு பிறந்த தினத்திலேயே உயிரிழந்தார் என்பதும் குறிபிடத்தக்கது.
மருத்துவர்கள் நாட்டு மக்களின் நலத்திற்காக ஓயாது உழைத்து அர்ப்பணிப்போடு செயலாற்றி வருகின்றனர். ஆனால் இவர்களுடைய ஆயுட்காலம் சாதாரண மக்களைவிட 10 வருடங்கள் குறைவாகவே இருக்கிறது. இப்படி ஓயாத உழைப்பை சேவை மனப்பான்மையோடு கொடுத்துவரும் மருத்துவர்களுக்கு நன்றிகள்.