குக்கிராமத்தில் இருந்து ஒரு கிரிக்கெட் வீரர்… தங்கராசு நடராஜன் பற்றிய சில சுவாரசியத் தகவல்கள்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கிரிக்கெட் வீரர் தங்கராசு நடராஜன், நடந்து முடிந்த 2020 ஐபிஎல் போட்டியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அதனால் நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 போட்டியில் இந்திய அணி சார்பாக விளையாட இவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இவருடைய கிரிக்கெட் அனுபவத்தைப் பற்றி பிபிசி ஒரு சிறப்பு தொகுப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில், அவருடைய இளமை கால அனுபவங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
தங்கராசு நடராஜனின் சொந்த ஊர் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி எனும் கிராமம். பிறந்து வளர்ந்தது எல்லாம் அங்குதான். அவருடைய அப்பா ஒரு சாதாரண நெசவுத் தொழிலாளி. அம்மா சாலையில் உணவுக் கடையை வைத்து நடத்தி வந்திருக்கிறார். 5 ஆம் வகுப்பு படிக்கும் வரையிலும் இவருக்கு டென்னீஸ் மீதுதான் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. அந்த சிறு வயதில் பாடப்புத்தகத்தைக் கூட வாங்க முடியாத வறுமை நிலையிலேயே இவர் வளர்ந்து வந்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து தன்னுடைய 20 ஆம் வயதில் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து பந்து வீசும் பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். ஜெயபிரகாஷ் எனும் அவருடைய சகோதரரின் உதவியோடு சென்னையில் நடந்த சில கிரிக்கெட் போட்டிகளில் முதலில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இப்படித்தான் அவருடைய ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கை வலியோடு தொடங்கி இருக்கிறது.
அடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு ராஞ்சி கிரிக்கெட் போட்டியில் விளையாட தங்கராசு நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அந்தப் போட்டியில் இவர் வெளிப்படுத்திய பந்து வீச்சு முறை கடும் சர்ச்சையை உண்டாக்கியது. இதனால் போட்டியில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பையும் அவர் இழந்தார். பின்னர் ஒரு வருட இடைவெளிக்குப் பின்னர் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு தனது பந்து வீசும் முறையை பன்மடங்கு மேம்படுத்தி இருக்கிறார்.
இதனால் தமிழகத்தில் நடைபெற்ற ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்து இருக்கிறது. அந்த போட்டிகளில் தனது முழு திறமையையும் இவர் வெளிப்படுத்தினார். இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு பஞ்சாப் ஐபிஎல் அணி இவரை தேர்வு செய்திருக்கிறது. பின்னர் 2018 முதல் ஹைத்ராபாத் சன்ரைசர்ஸ் அணியில் இவர் விளையாடி வருகிறார். தன்னுடைய முதல் ஐபிஎல் அனுபவத்தைப் பற்றி கூறும் இவர் ஆரம்பத்தில் எனக்கு சரியான வாய்ப்பு இல்லாமல்தான் இருந்தது. ஆனால் கிடைக்கும் வாய்ப்பை நான் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன் எனத் தெரிவித்து இருக்கிறார்.
நடந்து முடிந்த 2020 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தங்கராசு நடராஜன் 16 போட்டிகளில் பந்து வீசி 16 விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார். அதில் டோனி, ஏபிடி, வில்லியர்ஸ் போன்ற நட்சத்திரப் பட்டாளங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் உலகம் முழுவதும் தங்கராசு நடராஜனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தற்போது இவருக்கு வயது 29 மேலும் இவர் இடது கை பழக்கம் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வேகப்பந்து வீச்சாளராகக் கருதப்படும் இவர் யாக்கர் பந்து வீச்சில் சிறப்பான திறன் கொண்டவராக திகழ்கிறார்.
வரும் நவம்பர் 27 ஆம் தேதி இந்திய அணி டி20 போட்டிகளுக்காக ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருக்கிறது. அந்த அணியில் தங்கராசு நடராஜன் இடம் பெறுவார் என கடந்த திங்கள் கிழமை இந்திய பிசிசசிஐ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பு கிராமத்தில் இருந்து பல கனவுகளோடு தீவிர முயற்சியில் ஈடுபட்டு இருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு புது உத்வேகத்தை அளித்து இருக்கிறது என்றால் அது மிகையாகாது.
நன்றி- பிபிசி தமிழ்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout