நன்றி மறக்காத நட்டி… பரிசாகப் பெற்ற காரை பயிற்சியாளருக்கு வழங்கி மீண்டும் அசத்தல்!

அரபு எமிரேட்ஸில் நடைபெற்ற 2020 ஐபிஎல் தொடர் போட்டியின்போது ஐத்ராபாத் சன் ரைசர்ஸ் அணிக்காக பந்து வீசியவர் தமிழக வீரர் நடராஜன். அந்தப் போட்டியில் தொடர்ந்து தனது அசத்தலான யாக்கர் பந்து வீச்சை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின்போது வலைப்பந்து வீச்சிற்காக ஆஸ்திரேலியா சென்று இருந்தார்.

ஆனால் அணியில் இடம்பெற்று இருந்த சில முன்னணி வீரர்களின் காயம் காரணமாக அவர்கள் அணியில் இருந்து விலக, ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் நடைபெற்ற சில டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நடராஜன் 33 ஆண்டுகால வரலாற்றை முறியடித்து கப்பா மைதானத்தில் இந்திய அணி வெற்றிக்கோப்பையை வெல்ல மிக முக்கியக் காரணமாக இருந்தார்.

அதைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இப்படி கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் தான் ஒரு அசாத்திய பந்து வீச்சாளர் என்பதை நிரூபித்து இருந்தார். இவரைப் போலவே அறிமுக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், நவ்தீப் ஷைனி, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி போன்ற வீரர்களும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான வெற்றிக்கு காரணமாக இருந்தனர். இவர்களை பாராட்டும் விதமாக இந்திய தொழிலதிபரான ஆனந்த் மஹேந்திரா அறிமுக வீரர்கள் 6 பேருக்கு மஹேந்திரா கார் பரிசாக வழங்கப்படும் எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று நடராஜனுக்கு “தார்” எஸ்.யு.வி கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்தக் காரைப் பெற்றுக்கொண்ட நடராஜன் தனது வீட்டிற்கு ஓட்டிச் சென்றதோடு தனக்கு கார் பரிசு வழங்கிய ஆனந்த் மஹேந்திராவிற்கு, தான் ஆஸ்திரேலிய வெற்றியின்போது அணிந்து இருந்த ஜெர்சியில் கையெழுத்து இட்டு அதை அனுப்பியும் வைத்து இருந்தார்.

இப்படி மகிழ்ச்சிக் கடலில் துள்ளிக்குதித்துக் கொண்டு இருந்த நடராஜன் தொடர்ந்து தனது பரிசு காரை, தற்போது இதுவரை தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர் ஜெயப்பிராஷ்க்கு வழங்கி இருப்பது மேலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் வெற்றிப் படிகளுக்கு சென்று விட்ட பின்னரும் தனது பயிற்சியாளரை மறக்காத நட்டி தனது பரிசு காரை உடனடியாக பயிற்சியாளர்களுக்கு வழங்கி மீண்டும் மக்கள் மனதை வென்று இருப்பதாக பாராட்டை பெற்று வருகிறார்.