சிறப்பு அதிகாரி நியமனம் குறித்து அதிரடி கருத்து தெரிவித்த நடிகர் சங்க நிர்வாகிகள்
- IndiaGlitz, [Thursday,November 07 2019]
நடிகர் சங்கம் சரியான வகையில் செயல்படவில்லை என்ற காரணத்தை காட்டி, அச்சங்கத்திற்கு இன்று சிறப்பு அதிகாரியை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. இதனையடுத்து இன்று செய்தியாளர்களை நடிகர் சங்க நிர்வாகிகள் சந்தித்தனர்.
சிறப்பு அதிகாரிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்போம் என்று கூறிய நடிகர் சங்க தலைவர் நாசர், இந்த பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சரை சந்திப்போம் என்று தெரிவித்தார். மேலும் நாங்கள் சட்ட ரீதியாக, ஜனநாயக பூர்வமாக தேர்தலை எதிர்கொண்டோம் என்றும், இப்போதும் சட்ட ரீதியாக தான் செயல்பட்டு வருகின்றோம் என்றும் நாசர் கூறினார்.
சிறப்பு அதிகாரி நியமனத்திற்கு எதிர்த்து தெரிவித்து நாளை நீதிமன்றம் செல்ல உள்ளதாகவும், 4 பேர் கொடுத்த புகாரின் பேரில் 3,000 பேர் கொண்ட சங்கத்திற்கு எதிராக அதிகாரியை நியமித்துள்ளனர் என்றும், ராதாரவி பதவிகாலத்தில் சங்கத்தில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றது, ஆனால் அப்போது, அரசு சிறப்பு அதிகாரியை நியமிக்கவில்லை என்றும் பூச்சி முருகன் தெரிவித்தார்.
மேலும் ஆகஸ்ட் மாதம் வரை அனைவருக்கும் பென்ஷன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், சங்கம் செயல்படவில்லை என கூறுவது தவறு என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்தார்.