Space X நிறுவனம் தயாரித்த விண்கலத்தில் நாசா வீரர்களா??? புருவத்தை உயர்த்தும் வெற்றிக் கதை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருந்து இன்று மாலை 4.30 மணிக்கு Space X நிறுவனம் தாயாரித்துள்ள புதிய விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர்கள் விண்ணிற்கு பறந்து செல்ல இருக்கிறார்கள். இந்தச் செய்திதான் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக பார்க்கப் பட்டு வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகரமாக சோதனை செய்தது. தற்போது, 9 ஆண்டுகளுக்கு பிறகு நாசா வீரர்கள் Space X நிறுவனம் தாயாரித்துள்ள புதிய விண்கலத்தில் விண்வெளிக்கு செல்ல இருக்கிறார்கள். இந்த நிகழ்வு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லாக இருக்கும் எனவும் எதிர்ப் பார்க்கப்படுகிறது.
இதுவரை அமெரிக்கா விண்வெளித்துறையில் குவித்த வெற்றிக்கு பின்னால் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் இருந்தது. அதனால் தான் மற்ற நாடுகளை விட விண்வெளித் துறையில் அமெரிக்காவால் கொடி கட்டி பறக்க முடிந்தது. இப்படி இருக்கும்போது புதிதாக ஏன் அமெரிக்கா Space X நிறுவனத்தின் உதவியை நாட வேண்டும் என் கேள்வி எழலாம். நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துக் கொடுக்கும் விண்கலத்தை விட Space X உருவாக்கும் விண்கலங்கள் மிகவும் விலை மலிவு என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம். தற்போது இந்தக் வெற்றிக் கதை எப்படி சாத்தியமானது என உலகமே புருவத்தை உயர்த்தி பார்க்கத் தொடங்கி இருக்கிறது. காரணம் உலகம் முழுவதும் அரசு நிறுவனங்களைத் தவிர வேறு யாரும் விண்வெளித் துறையில் இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்த வில்லை. ஒரு தனியார் நிறுவனம் விண்வெளித் துறையில் இவ்வளவு பெரிய சாதனையை நிகழ்த்தி இருப்பது இதுவே முதல் தடவை என்பதுதான் தற்போது மிகப்பெரிய ஆச்சர்யம்.
Space X நிறுவனத்தில் நிர்வாகி எலான் மஸ்க் தனது முதல் நிறுவனத்தைத் தொடங்கி அதில் பெரும் தோல்வி அடைந்து தூக்கி வீசப்பட்ட போது அவருக்கு வயது 30. உழைத்து உழைத்துப் பழகிப்போன ஒரு வேலைக்காரன் எப்போதும் சும்மாவே இருக்கமாட்டான் என்பது போல ஒருபோதும் எலான் வெறுமனே இருந்தது கிடையாது. ஜிப் 2 நிறுவனத்தை உருவாக்கி அதனால் பெருத்த நட்டமடைந்தாலும் பெரிய அனுபவத்தை கற்றிருந்தார். அந்த அனுபவத்தைக் கொண்டு அடுத்து அவர் ஆரம்பித்த நிறுவனம் X.Com என்ற நெட்வொர்க் கம்பெனி. இதாவது கைக்கொடுக்குமா என்று எதிர்ப்பார்த்த அவருக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம்தான். நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் இவரே வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் அளவிற்கு நிறுவனம் சரிவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்தத் தருணத்தில்தான் எலான் மஸ்க் தனது கனவு உலகை நிஜமாக்க வேண்டும். இப்படி பணத்தைச் சம்பாதிக்கும் தொழில் நிறுவனங்கள் எல்லாம் வேண்டாம். நான் இறந்த பிறகும் என்னைப் பற்றி மற்றவர்கள் பேச வேண்டும் என்ற தீராத வெறியோடு அலைய ஆரம்பித்தார். இதற்கு காரணம் அவரது தாத்தா ஜாஷுவா. இந்நேரத்தில் இவரது தாத்தா என்ன செய்திருக்க போகிறார் என்று அலட்சியம் கூட நமக்கு வந்திருக்கலாம். ஒரே ஒரு என்ஜின் பூட்டப்பட்ட விமானத்தில் ஆப்பிரிக்காவில் ஆரம்பித்து ஆசியா, ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் 30 ஆயிரம் மைல்கள் வலம் வந்தவர் இவரது தாத்தா. விமானத்தில் பறக்க வேண்டும் என்பது இவரது தீராதக் காதல். அந்த அனுபவத்தை புத்தகமாகவும் எழுதி வைத்திருக்கிறார். அந்த புத்தகத்தைக் கரைத்து குடித்துவிட்டு விண்வெளி துறையில் தீராதக் காதல் கொண்ட நம் ஹீரோ எலான் மஸ்க் தனது அனுபவத்தையும் 4 புத்தகங்களாக எழுதித் தீர்த்து இருக்கிறார்.
இப்படி ஆரம்பித்த விண்வெளித்துறை பற்றிய தீராத ஆசையால் தனது குடியிருப்பை லாஜ் ஏன்ஜெல்ஸ்க்கு மாற்றினார். ஏனெனில் அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜெல்ஸ் நகரம் என்பது நமது கோடம்பாக்கம் சினிமா துறை மாதிரி. விண்வெளிக்கு சம்பந்தமான அத்தனை நிறுவனங்களும் அங்கு தான் இருக்கின்றன. இவரும் அங்கே சென்று தனது கனவை நிஜமாக்கும் வேலையை ஆரம்பித்தார். தேடல், தேடல் இதுமட்டுமே எலான் மஸ்க்கின் ஒரே வேலை. ரஷ்யா விற்கும் விலையைவிட தனது பொருட்கள் மிகவும் விலை மலிவாக இருக்க வேண்டும் என்று அண்ணாச்சி கடைக்காரர் மாதிரி பேச ஆரம்பித்தார். விண்வெளித் துறையில் மலிவான விலையில் விண்கலன்களை தயாரிக்க முடியுமா என்று இவருடன் இருந்தவர்கள் எல்லாம் சிரிக்க ஆரம்பித்தார்கள். குறைவான விலையில் விமானங்களைத் தயாரிக்கவும் முடியும் என்று இவரைப் போலவே நம்பிக் கொண்டிருந்த டாம் மியூலர் என்ற நபரோடு இவருக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு தனது கனவை சாத்தியமாக்கும் என்றும் அவர் நம்பினார்.
இரண்டு பேரும் சேர்ந்து 30 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் சில ராக்கெட்டுகளைத் தயாரிக்கலாம் என்று முடிவெடுத்தார்கள். ஜுன் 2002 ஆம் ஆண்டு இவர்களின் திட்டப்படி Space X நிறுவனம் தொடங்கப்பட்டது. பெயருக்கு அமெரிக்காவின் பல நிறுவனங்கள் இவருக்கு வாழ்த்துகளை சொல்லி வைத்தன. ஆனால் விரைவில் கேலிப் பொருளாக்கப் பட்டார் எலான் மஸ்க். காரணம் 1957 -1966 க்கு இடையில் அமெரிக்கா அனுப்பிய 400 ராக்கெட்டுகளில் 100 ராக்கெட்டுகள் பாதி வழியைக் கூட அடையவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது ஒரு தனியார் நிறுவனம் அதுவும் விண்வெளித்துறையில் 30 மில்லியன் டாலர்களை வைத்துக்கொண்டு சில ராக்கெட்டுகளை தயாரிக்கப் போகிறதா? என்று உலகமே ஏளனம் செய்ய ஆரம்பித்தது. ஆனால் இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாமல் தனது கனவை நிஜமாக்கி காட்டியிருக்கிறார் எலான் மஸ்க்.
இவர் தயாரித்து இன்று விண்வெளிக்கு அனுப்ப இருக்கும் விண்கலம் ரஷ்ய தயாரிப்பை விட மிகவும் விலை குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பே சில ராக்கெட்டுகளை Space X நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகரமாக சோதித்தும் பாக்கவும் செய்திருக்கிறது. உலகமே முயற்சிக்காத ஒரு துறையில் துளியும் அஞ்சாது ஒரு தனி மனிதன் இப்படி சாதித்து இருப்பது இதுவுமே முதல் முறை என்று தற்போது எலான் மஸ்க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இத்தனைக்கும் காரணம் இவரின் தேடல் மட்டுமே. வித்தியாசமான சிந்தனை, அதில் ஆழ்ந்த அறிவை பெற வேண்டும் என்ற தேடல் என்ற இரண்டும் தற்போது வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறது. இவர் சமீபத்தில் தனக்கு பிறந்த குழந்தைக்கு கூட ஒரு வித்தியாசமான பெயரைத்தான் வைத்திருக்கிறார். அந்த பெயர் இதுதான் X Æ A-12. முடிந்தால் உச்சரித்துப் பாருங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com