போகாதே... என் தலைவா... போகாதே... பிரதமர் மோடி அறிவிப்பால் கதறும் ஆதரவாளர்கள்
- IndiaGlitz, [Tuesday,March 03 2020]
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளப் பக்கங்களில் இருந்து விலகுவதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பைப் பார்த்த அவரது ஆதரவாளர்கள் தான் இப்படி “போகாதே“ எனத் தங்களது வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர்
பிரதமர் மோடி, ஃபேஸ் புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போனற சமூக ஊடகங்களில் இருந்து விலகுவது குறித்து யோசித்து வருவதாகவும், ஞாயிற்றுக்கிழமை அது குறித்த அறிவிப்பு வெளியாகும்” எனவும் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்த டிவிட்டினை பார்த்த மோடியின் ரசிகர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து தங்களது வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுக்கவே பிரதமர் மோடிக்கு அதிகளவு ஃபாலோயர்கள் இருந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. மிகப்பெரிய அரசியல் தலைவராகவும் அதே நேரத்தில் மக்களுடன் தொடர்புக்கு அதிகமாகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி வரும் மோடியின் இந்த அறிவிப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
மோடியின் ஆதரவாளர் ஒருவர் “உங்களுக்காகத் தான் சமூக ஊடகங்களில் கணக்கைத் தொடங்கினேன். நீங்கள் வெளியேறினால் நானும் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை” என்று டிவிட் செய்து வலைத் தளப் பக்கத்தில் தனது அன்பை இறைத்து இருக்கிறார். சமூக ஊடகத்தில் இனி பிரதமர் உரையாட மாட்டார் என வருத்தம் தெரிவித்த ரசிகர்கள் முடிவினை மறு பரிசீலனை செய்யுங்கள் எனக் கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.
பிரதமரைத் திக்கு முக்காடச் செய்யும் அளவிற்கு ஆதரவு குரல்கள் ஒருபக்கம் குவிந்து வந்தாலும் விமர்சனங்களும் இவரது டிவிட்டருக்கு வரத்தான் செய்கிறது.
பிரதமரின் டிவிட்டுக்கு காங்கிரஸின் மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல்காந்தி எதிர் வினையாற்றி இருப்பது தற்போது மேலும் விவாதத்தை கிளப்பி இருக்கிறது. “வெறுப்பைக் கைவிடுங்கள், சமூக ஊடக கணக்கை அல்ல” என்ற ராகுலின் கருத்தினை பலர் வரவேற்றும் வருகின்றனர்.
சமுக ஊடகத்தில் இருந்து பிரதமரின் விலகல் அறிவிப்பை அடுத்து Nosir என்ற ஹாஷ்டேக்கும் தற்போது வலைத் தளங்களில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. ”நோ சார்” என்ற பெயரில் இந்த ஹாஷ்டேக் தற்போது பிரதமருக்கு NO சொல்லி வருகின்றன. மேலும், விலகலைக் குறித்து ஆலோசிக்குமாறும், வருத்தம் தெரிவித்தும் 30,000 க்கும் மேற்பட்ட ட்விட்கள் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத் தக்க்து.
This Sunday, thinking of giving up my social media accounts on Facebook, Twitter, Instagram & YouTube. Will keep you all posted.
— Narendra Modi (@narendramodi) March 2, 2020