புதிய கல்விக்கொள்கை: சூர்யாவுக்கு பிரபல அரசியல்வாதி ஆதரவு

  • IndiaGlitz, [Tuesday,July 16 2019]

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்துக்கு சமூக வலைதள பயனாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே நல்ல ஆதரவு கிடைத்தாலும் முக்கிய அரசியல்வாதிகள் யாரும் அவருக்கு ஆதரவு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய கல்விக்கொள்கையை கடுமையாக விமர்சனம் செய்யும் அரசியல் தலைவர்கள் கூட சூர்யாவின் இந்த கருத்தை கண்டுகொள்ளவில்லை என்பது துரதிஷ்டமாக கருதப்படுகிறது.

மாறாக ஒரு சில அரசியல்வாதிகள் சூர்யாவின் இந்த கருத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். குறிப்பாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஹெச் ராஜா மற்றும் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் சூர்யாவை கடுமையாக விமர்சனம் செய்ததால் சூர்யாவின் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் சூர்யாவுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத். அவர் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

தம்பி சூர்யா, அகரம் அறக்கட்டளை மூலம் அப்பாவி மக்களின் கல்விக்கு உதவுகிற நீ .. தகரச்சட்டங்களை பொருட்படுத்தாதே. சிகரங்களை நோக்கிய உன் பயணத்தை தகரங்களின் சத்தங்கள் எதுவும் செய்துவிடாது.

புதிய கல்விக் கொள்கையை கேள்வி கேட்கிறத் தகுதி எல்லோரையும் விட உனக்கு அதிகமாகவே இருக்கிறது. உன்னை கேள்வி கேட்கத்தான் எவனுக்கும் தகுதி இல்லை.

புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யாவின் கருத்துக்கு அரசியல்வாதிகளிடையே ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி கிடைத்து வருவதால் இதுகுறித்து தற்போது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.