அரசியலில் இருந்து தப்பிப்பது ஒன்றுதான் ரஜினிக்கு ஒரே வழி: நாஞ்சில் சம்பத்
- IndiaGlitz, [Saturday,March 14 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்த கருத்தை தெரிவித்தார். இந்த கருத்திலிருந்து அவர் அரசியலில் இருந்து பின்வாங்கி விட்டதாகவும், போருக்கு பயந்து ஒதுங்கிவிட்டதாகவும் பலர் கருத்து தெரிவித்தனர். ஒரு சிலர் ரஜினிகாந்த் பின்வாங்கவில்லை என்றும், கண்டிப்பாக அவர் கட்சி ஆரம்பித்து களத்தில் இறங்குவார் என்றும் அவர் எதிர்பார்த்த புரட்சி நிச்சயம் தமிழகத்தில் நடக்கும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்தின் செய்தியாளர் சந்திப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திமுகவில் இருக்கும் பழம்பெரும் அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத் அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
ரஜினிகாந்தின் அறிவிப்பு தமிழகத்தில் எந்த சலனத்தையும் உருவாக்கவில்லை என்றும் அரசியலுக்கு வராமல் தவிர்ப்பதை விட ரஜினிக்கு வேறு வழி இல்லை என்றும் கூறினார். மேலும் ரஜினியின் முடிவால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்றும், ரசிகர்களை ரஜினிகாந்த் வழிநடத்த தவறிவிட்டார் என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
நாஞ்சில் சம்பத் அவர்களின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.