ஓபிஎஸ்-க்கு எதற்கு ஆயுத பாதுகாப்பு? நாஞ்சில் சம்பத்

  • IndiaGlitz, [Friday,May 26 2017]

முன்னால் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதனால் அவருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்க கோரியும் அவரது அணி தரப்பில் உள்துறை அமைச்சகத்தில் கடந்த சில நாடுகளுக்கு முன் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்ற உள்துறை அமைச்சகம் அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க, உத்தரவிட்டடது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஓபிஎஸ் அவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு குறித்து அதிமுக பேச்சாளரும் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நேற்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட கூட்டத்தில் இதுகுறித்து நாஞ்சில் சம்பத் பேசியபோது, 'மோடியின் சதி செயலுக்கு உடந்தையாக இருப்பவர் ஓபிஎஸ். அதிமுகவை காட்டி கொடுத்ததன் மூலம் எட்டப்பன் வரிசையில் ஓபிஎஸ்க்கு இடம் கிடைத்துள்ளது. மோடியின் ஏற்பாட்டில் அவருக்கு 'ஒய்' பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செத்த பிணத்தை யாரும் கொல்வதில்லை. ஓபிஎஸ்க்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பதன் மூலம் ஆயுதங்களுக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டனர்' என்று கூறினார்.

மேலும் அவர் பேசியபோது, 'ஓ.பன்னீர்செல்வம் முறைகேடு செய்த சேர்த்த சொத்து பல ஆயிரம் கோடி துபாய், சிங்கப்பூர், பக்ரைன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளது. எனவே விரைவில் நாங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஓபிஎஸ் மீது விசாரணை கமிஷன் அமைக்கவும், லஞ்ச ஒழிப்பு துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துவோம்' என்று கூறினார்.