இரண்டு சசிகலாவுக்கும் என்ன வித்தியாசம். நாஞ்சில் சம்பத் பேட்டி

  • IndiaGlitz, [Thursday,January 05 2017]

ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கிட்டத்தட்ட அனைத்து அதிமுக தலைவர்களும் ஒருசேர கூறிய நிலையில் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவில் இருந்து மட்டுமின்றி அரசியலை விட்டே வெளியேறியவர் நாஞ்சில் சம்பத்
சசிகலா பொதுச்செயலாளர் பதவியேற்றவுடன் அ.தி.மு.க பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா அம்மையாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சசிகலாவுக்கு மட்டுமே தலைமை தாங்கத் தகுதி உள்ளது என்று முடிவெடுத்துவிட்டார்கள். நிழல் நிஜமாகிவிட்டது. தாழ்வாரம் வீடாகிவிட்டது. தவிடு நெல்லாகிவிட்டது. பொல்லாச் சிறகுள்ள வான்கோழி ஒரே நாளில் தோகை மயிலாகிவிட்டது. யார் உட்கார்ந்த நாற்காலியில் யார் உட்காருவது என்பதை நினைத்தாலே தூக்கம் வரவில்லை. அவரை ஏற்றுக் கொள்வதற்கான எந்த தகுதியும் எனக்கு இல்லை' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்
இந்நிலையில் இன்று பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில், 'என்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் சசிகலா எந்த கருத்தும் சொன்னதில்லை. கூட்டத்துக்குப் போக வேண்டாம் என்றோ, அரசியலை விட்டு விலக சொல்லியோ ஒரு போதும் சொல்லவில்லை. ஏசு சிலுவையை தூக்கி, தானே தோளில் போட்டுக் கொண்டதைப் போல, என்னுடைய சுமைகளை முற்றிலுமாக சுமந்து கொள்ளும் சுமைதாங்கி சசிகலா.” என உருக்கமாக கூறியிருந்தார் நாஞ்சில் சம்பத்.
என்ன இது ஒருசில நாட்களில் நாஞ்சில் மாறிவிட்டாரா? என்று எண்ணுபவர்களுக்கு ஒரு சிறு விளக்கம், அவர் சொன்ன சசிகலா, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இல்லை, அவருடைய அன்பு மனைவி சசிகலாதான்.
இரண்டு சசிகலாவுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்விக்கு பதில் அளித்த நாஞ்சில் சம்பத், 'இந்த சசிகலா அரசியலில் திணிக்கப்படுகிறவர். அந்த சசிகலா என்னுடைய குடும்பத்தை வழிநடத்துபவர். இந்த சசிகலாவை நான் பார்த்ததில்லை. பழகியதில்லை. ஒருநாள் கூட நான் அறிமுகமானதில்லை. ஆனால் அந்த சசிகலா என்னை மணம்முடித்த நாள்முதலாக கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்கிற ஒரு குலமகளாக இருக்கிறாள்' என்று கூறியுள்ளார்.