தணிக்கை குழுவே தேவையில்லை. 'அழகி' நடிகை பரபரப்பு கருத்து
- IndiaGlitz, [Tuesday,May 31 2016]
தணிக்கை குழு தேவையா? அல்லது அதில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமா? என்பது குறித்து கடந்த சில மாதங்களாக கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில் பிரபல நடிகை நந்திதா தாஸ், தணிக்கை குழுவே தேவையில்லை என்றும் தணிக்கை குழுவை கலைக்க வேண்டும் என்றும் பரபரப்பு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், நீர்ப்பறவை போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை நந்திதாதாஸ். இவர் நடித்த ஃபயர் மற்றும் 'வாட்டர்' ஆகிய படங்கள் தணிக்கை குழுவால் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் ஒரு படத்திற்கு தணிக்கை செய்வது அவசியம் இல்லாதது என்றும் உலகம் முழுவதும் சுமார் 200 கோடி பேர் பார்க்கும் ஒரு படத்திற்கு 5 பேர் கொண்ட ஒரு குழு சான்று அளிப்பது எப்படி நியாயமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு படம் நல்ல படமா? மோசமான படமா? என்பதை தீர்மானிப்பது மக்கள்தான் என்றும் எந்த படத்தை பார்க்கலாம் எந்த படத்தை பார்க்க கூடாது என்பதை மக்கள் முடிவுக்கே விட்டு விடவேண்டும் என்றும் ஒரு படத்தை பார்த்து விட்டு நல்ல படம் இல்லை என்று ஒருவர் சொன்னால் அந்த படத்தை பார்க்க யாரும் போக மாட்டார்கள் என்றும் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் எது சரி எது தவறு என்று தெரியும் என்றும் அவர்களுக்கு தணிக்கை குழு சொல்லித்தர வேண்டிய அவசியம் இல்லை' என்றும் கூறியுள்ளார்.