என்னால் சரிவர நினைவுகூர கூட முடியவில்லை.. ரஜினி பாராட்டு குறித்து பிரபல இயக்குனர்..!

  • IndiaGlitz, [Sunday,October 27 2024]

சமீபத்தில் வெளியான திரைப்படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய நிலையில் அவருடைய பாராட்டை என்னால் படம் பிடிக்க முடியவில்லை, மின்னல் வேகத்தில் அவர் பாராட்டிய வார்த்தைகளை என்னால் சரியாக நினைவு கூறக்கூட முடியவில்லை என்று அந்த படத்தின் இயக்குனர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

சசிகுமார் நடிப்பில் இரா சரவணன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’நந்தன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனரிடம் போன் செய்து ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து இரா சரவணன் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:

அறிமுகம் இல்லா எண்ணிலிருந்து அழைப்பு… “சரவணன் சாருங்களா…? ரஜினி சார் ‘நந்தன்’ படம் பார்த்தார். இப்போ உங்ககிட்ட பேசுவார்” என்றார்கள். ரோட்டில் நின்ற நான் எப்படி என் அலுவலக அறைக்குள் ஓடி வந்து கதவைச் சார்த்திக் கொண்டேன் என்பது கூடத் தெரியாது. போன் வந்தது. பூவைத் தொடுவது போல் போனை தொட்டேன்.

“டைரக்டர் சார்… நான் ரஜினிகாந்த் பேசுறேன். உங்க ‘நந்தன்’ படம் பார்த்தேன்… கையைப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய்க் காட்ட நான் தயார்னு சொல்லி இருக்கீங்க… என்ன கட்ஸ் சார்…” எனப் பேசத் தொடங்கியவர், படபட வேகத்தில் படத்தின் மொத்த விஷயங்களையும் பாராட்டித் தள்ளினார்.

சசிகுமார், சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட அத்தனை பேர் நடிப்பையும் குறிப்பிட்டுப் பாராட்டினார். மின்னலைப் படம் பிடிக்க முடியாதது போல், பட்படார் பட்டாசாகத் தெறித்து விழுந்த அவர் வார்த்தைகளை என்னால் சரிவர நினைவுகூர கூட முடியவில்லை.

ஒரு பனித்துளியை சுண்டி வீசுவதுபோல் மொத்த பாரங்களையும் வாழ்த்து வார்த்தைகளால் துடைத்தெறிந்தார் சூப்பர் ஸ்டார். ‘நந்தன்’ என்னும் எளியவன் தலைக்கு கிரீடமாகி இருக்கிறது ரஜினி சாரின் வாழ்த்து…

அதேபோல் ரஜினியின் வாழ்த்து குறித்து நடிகர், இயக்குனர் சசிகுமார் கூறியதாவது: நந்தனது தைரியத்தையும் உழைப்பையும் பாராட்டியதோடு, படக்குழுவினரை தொலைபேசியில் அழைத்து அகம் திறந்து வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி