சம்பள பாக்கி: விஷாலின் குற்றச்சாட்டும், நந்தகோபாலின் விளக்கமும்
- IndiaGlitz, [Monday,November 12 2018]
நடிகர்களுக்கு சம்பள பாக்கி வைத்துள்ள மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு நடிகர் நடிகைகள் ஒத்துழைப்பு வழங்க கூடாது என்று நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இந்த அறிக்கைக்கு நந்தகோபால் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சங்கத்தின் அறிக்கையை அடுத்து இந்த பிரச்சனை குறித்து விஷால் கூறியபோது, 'எனக்கு ரூ.3.4 கோடியும், விஜய் சேதுபதிக்கு ரூ.3 கோடியும் மற்றும் விக்ரம் பிரபுவுக்கு சம்பள பாக்கி கொடுக்கப்படவில்லை. மேலும், விஜய் சேதுபதி ‘96’ படம் வெளியாகும் நேரத்தில் தன்னுடைய பணத்தை அளித்து உதவியுள்ளார். நடிகர்களை படம் வெளியாகும் நேரத்தில் அவர்களுடைய உணர்வுகளின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அவர்களுக்கு சிக்கலை உருவாக்கி, தங்களது சம்பளத்தை தியாகம் செய்யும் அளவுக்கு நிர்பந்திக்கின்றனர் தயாரிப்பாளர்கள். இதற்கு இனிவரும் நாட்களில் இதுபோன்று துன்புறுத்துவோருக்கு எவரும் ஒத்துழைப்புத் தரக்கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கேட்டுக் கொள்கின்றது என்று கூறியுள்ளார்.
விஷாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் கூறியபோது, '‘கத்தி சண்டை’ படத்தின் டப்பிங் பணி முடியும் போது முழு தொகையும் வழங்கி விடுவதாக கூறினேன். அதற்கு விஷாலும் ஒப்புக் கொண்டார். விஜய் சேதுபதிக்கு ‘96’ வெளியாவதற்கு 5 மாதங்களுக்கு முன்பே ஊதியம் கொடுத்தாயிற்று. ஆனால், படம் வெளியாகும் வேளையில், விஜய் சேதுபதி தனது கையிலிருக்கும் பணத்தைக் கொடுத்து தக்க சமயத்தில் உதவினார். அதைத் திருப்பி கொடுப்பதற்கு பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பேன். அதேபோன்று, விக்ரம் பிரபுவிற்கும் நிலுவையிலிருந்த ஊதியமும் வழங்கிவிட்டேன். ‘துப்பறிவாளன்’ படத்திலேயே சில பிரச்சனைகள் விஷாலுடன் இருந்தது. ஆகையால், விரைவிலேயே இந்தப் பிரச்சனைக்கு நல்ல தீர்வு காண்போம் என்று கூறியுள்ளார்.
இருதரப்பினர்களும் அவரவர் பக்க நியாயத்தை கூறியிருக்கும் வேளையில், இறுதியாக என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.