close
Choose your channels

பி.சி. ஸ்ரீராம் -சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்த நண்பன் குழுமம்

Saturday, August 5, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நண்பன் என்டர்டெயின்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம் ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் கோலாகலமான உற்சாகத்துடன் நடைபெற்றது.

ஆகஸ்ட் 3 ஆம் தேதியன்று மாலை சென்னை வர்த்தக மையத்தில் நண்பன் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழா, மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் இசை மேதை சிவமணி, வீணை இசை மேதை ராஜேஷ் வைத்யா, பியானோ இசை மேதை லிடியன் நாதஸ்வரம் ஆகிய மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்கினர். இதைத்தொடர்ந்து மேடை நகைச்சுவை கலைஞர்களான பாலா-குரேஷி இணை, மேடையேறி தங்களது அதிரடியான பகடித்தனமான பேச்சால் பார்வையாளர்களை கவர்ந்தனர்.

இந்நிகழ்வை அடுத்து நண்பன் குழுமத்தின் இணை நிறுவனரும், தொழிலதிபருமான நண்பன் மணிவண்ணன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார். அவரின் வரவேற்புரையில், '' நண்பன் குழுமம் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறதே ஏன்? கலைஞர்களுக்கு விருது வழங்குகிறார்கள் ஏன்? திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார்கள். இங்கு ஏராளமான படத்தை தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கிறது. இதில் இவர்கள் என்ன புதிதாக சாதிக்கப் போகிறார்கள்? என ஏராளமான கேள்விகள் உங்களிடத்தில் இருக்கும். இதற்கு பதில் சொல்ல நண்பன் குழுமத்தில் பலர் இருக்கிறார்கள்.

நான் நண்பன் குழுமத்தை பற்றிய ஒரு முக்கியமான விசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நண்பன் -யாருக்கு உதவி தேவைப்படுகிறதே.. அவர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் முழு அன்புடன் உதவி கரம் நீட்டுகிறது.

நண்பன் குழுமம் கலை கலாச்சாரம் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து, ஆதரவளிக்க திட்டமிட்டிருக்கிறோம். இதற்காகவே நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை மற்றும் கலாச்சார கருவூல மையம் எனும் புது முயற்சிகளை தொடங்கி இருக்கிறோம். இதற்கு அனைவரின் ஆதரவு ஒத்துழைப்பும் தேவை என கூறி, இவ்விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்” என்றார்.

அவரைத் தொடர்ந்து நண்பன் குழுமத்தின் இந்தியாவிற்கான விளம்பர தூதுவரும், நடிகருமான ஆரி அர்ஜுனன் பேசுகையில், '' இந்த மேடையில் நான் நிற்பதற்கும், வாழ்க்கையில் இந்த அளவிற்கான உயரத்தை எட்டியிருப்பதற்கும் காரணம் நண்பர்கள்தான். என் வாழ்க்கையில் நண்பர்கள் உணவளித்தார்கள். உதவி செய்தார்கள். காசு கொடுத்தார்கள். வாடகை கொடுத்தார்கள். இப்படி எத்தனையோ உதவிகளை நண்பர்கள் எனக்கு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என தெரியவில்லை. இந்த மேடை உருவாவதற்கு பல நண்பர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள்.‌ அவர்களுக்கு என்னுடைய அன்பு கலந்த முதல் நன்றிகள். வாழ்க்கையில் பல பல தருணங்களில் உதவிகள் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

பிக் பாஸில் வெற்றி பெற்ற பிறகு என்ன செய்யப் போகிறோம்? என்ற மிகப்பெரிய கேள்வி என்னுள் இருந்தது. எனக்கான பொறுப்பினை எப்படி ஏற்றுக்கொண்டு பகிர்ந்தளிக்க போகிறேன் என்று வினாவும் இருந்தது. இந்த தருணத்தில் நண்பன் குழுமத்தினை‌ சேர்ந்த நரேன் ராமசாமி- என் நண்பர்- இந்த நண்பன் குழுமத்திற்கு அறிமுகப்படுத்தினார்.‌ நண்பன் குழுமத்தினர் அனைவரும் வருடத்தின் அனைத்து நாட்களிலும் அயராது வேலை செய்கிறார்கள்.‌ அவர்களிடத்தில் நண்பன் குழுமத்தை பற்றி கேட்டபோது, ‘மனிதநேயம், சேவை. மக்களின் தேவைக்காக எந்தவித பிரதிபலனும் பாராமல் உதவி செய்வது...’ என சொன்னார்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இவர் செய்த சேவைகள் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அவர்கள் இங்கு மட்டுமல்ல பல நாடுகளுக்கும் உதவி செய்திருக்கிறார்கள். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரிய கூடாது என்பார்கள். இவர்கள் இதுவரை தாங்கள் செய்ததை எந்த வடிவத்திலும் விளம்பரப்படுத்தவில்லை. நண்பன் குழுமத்தின் நிறுவனரான ஜி கே எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவர் அடிக்கடி சொல்வதுண்டு. ‘நம் வேலையை நாம் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். நாம் மற்றவர்களுக்காக என்ன செய்ய வேண்டும்? என்பதை மட்டும் தான் சிந்திக்க வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று நாம் யோசிக்கவே கூடாது. அதேபோல் மக்களுக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஆண்டவன் நமக்கு பணம் கொடுத்திருக்கிறார். சக்தியை கொடுத்திருக்கிறார். அதை வைத்து அடுத்தவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும்’ என்பார். இதுதான் நண்பனின் முதல் தாரக மந்திரம்

நாம் ஒரு பிராண்டுடன் இணைத்துக் கொள்ளும் போது, அதன் மூலம் என்ன கிடைக்கிறது என்று தான் முதலில் நினைப்போம். ஆனால் நான் அந்த பிராண்டுடன் இணையும் போது அதற்கான மதிப்பு என்னவாக இருக்கும் என்று யோசித்தேன். எனக்கு பணம் பெரிதாக தெரியவில்லை பிராண்ட் வேல்யூ தான் பெரிதாக தெரிந்தது. அந்த பிராண்டு தான் நண்பனிசம். அதனால் இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் நண்பர்கள் தான்.

அதன் பிறகு இந்த நண்பன் குழுமம் எத்தனை நாளுக்கு நீடிக்கும்? என்ற ஒரு கேள்வியும் என்னுள் எழுந்தது. ஆனால் அவர்கள் இந்த சமூகத்தில் இருப்பவர்களில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பினை பெற்று தர முடியும் என யோசிக்கிறார்கள். மக்களுக்கு பயன்படும் விசயங்கள் குறித்து யோசிக்கிறார்கள். அதனால் நண்பர்கள் முக்கியம். நண்பர்களாகவே இருப்போம்.

இந்த விழாவில் முக்கிய நோக்கமே ஜிகே அவர்கள் முன் வைத்திருக்கும்‌ ஒரே விசயம் நண்பனிசம். உண்மையான நண்பர்களைத் தேடி இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார்கள்.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தற்போது புதிய முயற்சியினை தொடங்கி இருக்கிறார்கள். இதற்கு ஜிகே அவர்களின் நேர்மையான சிந்தனை தான் முதல் காரணம். அவரை ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் அவரின் இயல்பு மாறாத பேச்சு என்னை வியக்க வைத்தது. அவர் தண்ணீர் மாதிரி நிறமற்றவர். நிறமற்றது எந்த பாத்திரத்தில் ஊற்றினாலும் தண்ணீர் தாகத்தை தணித்துக் கொண்டே இருக்கும். இவரைப் போன்றவர்கள் நிறுவிய நண்பன் குழுமத்தில் விளம்பர தூதுவராக இணைத்துக் கொண்டதில் நான் பெருமிதம் அடைகிறேன்.

பிக் பாஸிலிருந்து வெளியே வந்து இரண்டாண்டுகளாகிறது. கையில் பணம் இல்லை. இருந்தாலும் என் மூலமாக சமூகத்திற்கு என்ன செய்ய முடியும், என்பதைக் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் அவர்களிடத்தில் என்னை ஏன் விளம்பர தூதுவராகத் தேர்ந்தெடுத்தீர்கள்? என கேட்டபோது, பணத்திற்காக நிறையப் பேர் வருவார்கள். புகழுக்காகவும் நிறையப் பேர் வருவார்கள். ஆனால் இந்தச் சமூகத்திற்காக வருபவர் நீங்கள் மட்டும்தான். அதனால் தான் உங்களைத் தேர்வு செய்தோம் என்றார்கள். சமூகத்திற்குச் சேவை செய்பவர்கள், நட்சத்திர நடிகர்களாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. என்றார்கள்.

இந்தத் தருணத்தில் இது போன்றதொரு பிரம்மாண்டமான விழா நடைபெறுவதற்கு ஏராளமான நண்பர்களின் தியாகமும் ஒரு காரணம். அதாவது இந்த விழாவிற்கு ஏராளமான நண்பர்கள் வருகை தந்திருக்கிறார்கள். இதற்காக அயராது பணியாற்றி இருக்கிறார்கள். அவர்களது மனைவிமார்கள், தங்களுடனான நேரத்தை.. தங்களுடன் செலவிடப்பட வேண்டிய நேரத்தை.. தியாகம் செய்ததால் தான் இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது.

ஒரு பெண் அவருடைய வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பார். ஆனால் தன் கணவனுடன் செலவிடும் நேரத்தை மட்டும் விட்டுத் தர மாட்டார். இது மிகப் பெரிய விசயம். அந்த வகையில் இந்த நண்பன் குழுமத்தைச் சேர்ந்த அத்தனை நண்பர்களின் மனைவிமார்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ இவர்களால்தான் நண்பன் குழுமத்தில் பணியாற்றும் நண்பர்கள் அடுத்தடுத்து மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்துச் சிந்திக்கிறார்கள்.

நேர்மையாக உழைக்க வேண்டும். நேர்மையாகச் சம்பாதிக்க வேண்டும். எனக்குக் கிடைத்ததை நான் மட்டும் வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என ஜி கே சொல்வதை நான் இங்கு குறிப்பிடவிரும்புகிறேன். நண்பன் - இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக.. எந்தக் கோணத்தில் உதவி செய்ய முடியும் என்பதைச் சிந்தித்துச் செயலாற்றுவதற்காகத் தான் அவர்கள் இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

இந்த மேடை கலை மற்றும் கலைத்துறையில் பணியாற்றும் கலைஞர்களுக்கு முக்கியமான மேடை. நண்பன் குழுமம் கலைஞர்களுக்காக உருவாக்கிய அமைப்பின் முதல் நிகழ்வு. இதில் கலந்து கொள்வதற்கும், கலந்து கொண்டவர்களுக்கும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.'' என்றார்.

அவரைத் தொடர்ந்து நண்பன் குழும நிறுவனர் ஜி கே பேசுகையில், '' இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். உங்களின் ஆதரவு இல்லாமல் இந்த விழா இவ்வளவு பிரமாண்டமாக நடைபெற்றிருக்காது.

நண்பன் குழுமம் -ஏராளமான சமூக விசயங்களுக்கு கரம் கொடுத்து ஆதரவளித்து வருகிறது. நண்பன் குழுமத்தை தொடங்குவதற்கு முக்கியமான காரணம் நண்பனிசம். இந்த தத்துவம் , நாம் எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தாலும், மற்றவர்கள் மீது நிபந்தனையற்ற அன்புடன் கூடிய உதவியை செய்ய வேண்டும் என்பதுதான். நண்பனிசம் ஆண் பெண் என்ற பாலின பேதம் இல்லாமல் இருக்க வேண்டும்.

கின்னஸ் சாதனை புரிந்த நண்பர் குற்றாலீஸ்வரன் உள்பட.. இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் நண்பர்கள் தான்.

நண்பன் குழுமம்- லாப நோக்கில்லாமல் செயல்படும் அமைப்பு. இந்த குழுமத்திலிருந்து தற்போது நண்பன் என்டர்டெய்ன்மென்ட் என்ற புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறோம். லாப நோக்கமற்ற முறையில் செயல்பட்டு, நிதி ஆதாரத்தை திரட்டும் இந்த அமைப்பு,, முதலில் தமிழகத்திலும், அதன் பிறகு இந்தியாவிலும், அதனைத் தொடர்ந்து உலகளவிலும் எங்களால் இயன்ற உதவியினை தொடர்ந்து செய்யவிருக்கிறோம். எங்களுடைய அறக்கட்டளையை தமிழகம், இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம்... என தொடர்ந்து சேவைகளை செய்ய விரிவு படுத்தவும் திட்டமிட்டிருக்கிறோம்.

நாங்கள் தேர்வு செய்யும் திட்டங்கள் அனைத்தும் தமிழர்களின் நலன்களுக்கானதாக இருக்கும். புதிதாக தொடங்கி இருக்கும் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் எனும் நிறுவனமும், லாப நோக்கமற்றதாகவே செயல்படும். அதிலும் திறமையிருந்தும் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்காக தொடங்கப்பட்டிருக்கும் இந்த அமைப்பு,, தொடர்ந்து செயல்படும். இதில் முதலீடு செய்ய ஏராளமான முதலீட்டாளர்களும், முதலீட்டு நிறுவனமும் ஆர்வத்துடன் இருக்கின்றன. இதன் மூலம் எங்களுக்கு கிடைக்கும் லாபத்தில் இந்த குழுமம் தொடர்ந்து இயங்கும். கடந்த நான்காண்டுகளில் மில்லியன் கணக்கிலானவர்களுக்கு உதவிகளை செய்திருக்கிறோம்.

நண்பனிசம் எனும் கருத்தியலை தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் எடுத்துச் செல்வோம் '' என்றார்.

நண்பன் குழுமத்தின் இண்டர்நேசனல் எண்டர்டெயின்மெண்ட் தலைவர் நரேன் ராமசாமி பேசுகையில், '' இங்கு வருகை தந்திருக்கும் நண்பர்களுக்கும், நண்பர்களின் உறவினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நண்பன் நண்பனிசம்- எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல்.. எந்தவிதப் பிரதிபலனும் பாராமல்... நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைக்கிறோம் அல்லவா.. அதுதான் நண்பனிசம். இதைக் கண்டுபிடித்த ஜிகே அவர்களுக்கு நாம் அனைவரும் பாராட்டுத் தெரிவிப்போம்.

நண்பன் ஜி கே வைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சூரிய கிரகத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சூரியனைத்தான் அனைத்து கிரகங்களும் சுற்றி வருகிறது. அனைத்து கிரகங்களுக்கும் சூரியன் இல்லை என்றால் வெளிச்சமில்லை. அதாவது நாங்கள் எல்லாம் ஒரு சந்திரன் போன்றவர்கள். ஜி கே சூரியனைப் போன்றவர்.

அன்பு ஒருவனை அறிஞனாக்கும். கலை ஒருவனை கலைஞனாக்கும். தியானம் ஒருவனை அமைதியாக்கும். உதவி செய்யும் பண்பே மனிதனை தெய்வமாக்கும்.

‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற திருக்குறளில் காலே கிடையாது. அதாவது துணை எழுத்து என்பதே இல்லை. அதாவது நெடில் கிடையாது. கல்வி கற்றவனுக்கு ஆயுள் முழுதும் இந்தக் கல்வி உதவி செய்யும்.

ஜிகே அடிக்கடி சொல்வதுண்டு. ‘அனைவரும் அவர்களுடைய சொந்தக் காலில் நிற்க வேண்டும். ஆயுள் முழுதும் நிற்க வேண்டும். உயிர் பிரியும் வரை நிற்க வேண்டும். உங்கள் குடும்பத்திற்காகவும்.. உங்கள் உறவினர்களுக்காகவும்.. உங்கள் சமூகத்திற்காகவும் நிற்க வேண்டும்’ என்பார்.

விளையாட்டு, இயற்கை விவசாயம்... எனப் பல துறைகளில் சேவையாற்றி வருகிறோம். ஒரு முறை ஆரி அர்ஜுனன் சந்தித்து பேசும் போது, ‘கலை மற்றும் கலாச்சாரத்திற்கு நீங்கள் எதுவுமே செய்யவில்லையே ஏன்?’ எனக் கேட்டார். அப்போதுதான் என்னுள் ஒரு விசயம் தோன்றியது. நிலத்தை இழந்தவன் பணத்தை இழப்பான். கலை கலாச்சாரத்தை இழப்பவன், தான் பிறந்த மண்ணின் கலாச்சாரத்தையே இழப்பான். நம்முடைய வேர் எங்கு இருக்கிறது என்பதனை தெரிந்து கொள்வதற்காகவும், அதனை தொடர்ந்து பேணுவதற்காகவும் இந்த அமைப்பினை தொடங்கி இருக்கிறோம். இந்த அமைப்பினை நலிவடைந்த கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் தொடங்கி இருக்கிறோம்.

இதுவரை நாங்கள் செய்துவரும் உதவிகளை எந்த தருணத்திலும் சந்தைப்படுத்தவில்லை. விளம்பரப்படுத்தவில்லை. நன்கொடையையும் கேட்கவில்லை. நண்பன் என்டர்டெய்ன்மெண்டை மட்டும் ஏன் இப்படி விளம்பரப்படுத்துகிறோம் என்றால்.. நாம் நல்லதை செய்யும் போது.. அது அடுத்தவர்களின் மனதிலும் நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். நல்லதையே நினைப்போம். நல்லதையே செய்வோம். நல்லதையே விதைப்போம். வணக்கம்.'' என்றார்.

நடிகர் நாசர் பேசுகையில், '' நண்பன் குழுமத்தைப் பற்றி ஆரி விரிவாகச் சொன்னார். உலகில் இருக்கும் உன்னதமான உறவு நட்பு. உன்னதமான நட்பை ஒரு தத்துவமாக்கி, அதனை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவதற்காகவும்.. நம் மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதற்காகவும் முதலில் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளைக்காரன் ஒரு விசயத்தைச் செய்தால்.. அதை உடனடியாக எழுதி வைத்து விடுவார், ஆனால் நாம் பல விசயங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம்.

நண்பனிசம்- விளக்கம் தேவையற்ற ஒரு தத்துவம். நட்பிற்கு விளக்கம் தேவையில்லை. அந்த ஒரு எளிய உறவை.. உணர்ச்சியை... உன்னதமான உணர்ச்சிகளாக்கி உலகம் முழுவதும் பரப்புகின்ற உங்களுக்கு இந்த அரங்கத்தில் உள்ள அனைத்து நண்பர்களின் சார்பாகவும் நட்பைக் காணிக்கையாக்குகிறேன்.

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வைப்பதைப் பெருமிதமாகக் கருதுகிறேன். எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக நினைக்கிறேன். நட்புடன் இருப்போம் நண்பர்களாகவே இருப்போம்.

இங்கு விருது பெற்ற கலைஞர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள் தான். நான் வாழ்க்கையில் என்ன ஆவேன் என தெரியாமல் இருந்த காலகட்டத்திலிருந்து என்னை வழிநடத்தியவர்கள். கவிஞர் அறிவுமதி, நான் படத்தை இயக்கும்போது அவராகவே முன்வந்து உதவி செய்தவர். பேராசிரியர் ராமசாமி அவருக்கும் எனக்குமான நட்பு புதிரானது. ஓவியர் டிராட்ஸ்கி மருது இல்லையென்றால் எனக்கு எழுதவே வந்திருக்காது. ” என்றார்.

அறிவுமதி பேசுகையில், '' என்னுடைய தந்தையார் எனக்கு வைத்த பெயர் மதியழகன். கடலூர் துறைமுகத்தில் பிறந்த என்னுடைய நண்பரின் பெயர் அறிவழகன். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எங்களை நண்பர்களாக்கியது. அவர்கள் வீட்டிற்கு நான் பிள்ளையானேன். எங்கள் வீட்டிற்கு அவன் பிள்ளையானான். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் எங்களைச் சந்திக்கும் போது, ‘அறிவு மதியை பார்த்தீர்களா.. அறிவு மதியை பார்த்தீர்களா..?’ எனக் கேட்பார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பூத்த எங்கள் நட்பிற்காக நான் சூட்டிக்கொண்ட பெயர் தான் அறிவுமதி.

அமெரிக்காவிலிருந்து இங்கு வந்து நண்பன் என்ற சொல்லை நண்பனிசம் என்ற சொல்லாக... அழகாக மாற்றியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அது உங்கள் உள்ளத்தின் அழகு மட்டுமல்ல.. எங்கள் தொன்மத்தின் அழகும் கூட.

“அண்ணனை விடவா ஒசத்தி என் நண்பன் எனக்கேட்டாள் அம்மா..
உன்னை விடவும் என்றேன் நான்.'' என்றார்.

விருது பெற்ற ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் பேசுகையில், '' இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது நண்பன் என்ற ஆரோக்கியமான இடத்திற்கு வந்திருக்கிறோம் என்று. எனக்கு அளிக்கப்பட்ட விருது, இனி நான் செய்யவிருக்கும் பணிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன் நன்றி '' என்றார்.

விருது பெற்ற கலை இயக்குநர் டி முத்துராஜ் பேசுகையில், ' நிறைய செலவழித்து என்னைத் தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் மிகப்பெரிய மேதை. கோயம்புத்தூர் பல்லவி தியேட்டரில் ‘இதயத்தைத் திருடாதே’ படத்தில் அவர் பெயர் திரையில் தோன்றும் போது, மேடை ஏறி ஆடி இருக்கிறேன். பிறகு அவருடன் இணைந்து பணியாற்றிய போது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தற்போது அவருடன் இணைந்து விருது பெறுவதும் சந்தோஷம்.'' என்றார் .

இயக்குநர் சேரன் பேசுகையில், '' நாம் அனைவரும் சேர்ந்து தான் அரசாங்கத்தை உருவாக்கி இருக்கிறோம். நாம் எல்லோரும் சேர்ந்து அளிக்கும் பணத்தில் தான் அரசாங்கம் இயங்குகிறது. நமக்கு வேண்டியவற்றை அரசாங்கம் செய்து தருகிறது. அப்படிச் செய்ய முடியாத சில வேலைகளை நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் குழுமம் செய்கிறது. அதனால் இவர்கள் ஒரு குட்டி அரசாங்கம். நண்பர்கள் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு, தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு உதவி செய்து வருவதும். சமூகத்துக்குத் தேவையான உதவி செய்து வருவதை வாழ்த்துவதிலும், வரவேற்பதிலும் கடமைப்பட்டிருக்கிறேன். மிக்க நன்றி. எனக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது பி.சி. ஸ்ரீராம் சொன்னது போல், அடுத்தடுத்து தொடர்ந்து ஓடுவதற்கு அளிக்கப்பட்ட ஊக்க மருந்தாக எடுத்துக் கொள்கிறோம். நண்பன் குழுமம் அனைவருடனும் இணைந்து.. தொடர்ந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.

விழாவில், நண்பன் க்ராஃப்ட் மாஸ்டர்ஸ் விருது இயக்குநர் பாக்யராஜ்.ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர் சேரன், கலை இயக்குநர் முதுதுராஜ், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இதற்கு முன்னதாக கலை மற்றும் பண்பாட்டு துறையில் சிறந்த சேவை செய்துவரும் கலைஞர்களான ஓவியர் ட்ராஸ்ட்கி மருது, பேராசிரியர் மு ராமசாமி, கவிஞர் அறிவுமதி, புரிசை கண்ணப்ப சம்பந்தம், பெரிய மேளம் கலைஞர் முனுசாமி ஆகியோருக்கு நண்பன் விருது வழங்கப்பட்டது- இதனை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனான்டாள் முரளி ராமசாமி, நடிகர் சங்க தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ஆகியோர் வழங்கினர்.

இவர்களைத் தொடர்ந்து நண்பன் டேலண்ட் கேட்வே விருதினை அறிமுக படைப்பாளிகளான கணேஷ் கே பாபு, விக்னேஷ் ராஜா, விநாயக் சந்தரசேகரன், முத்துக்குமார், மந்திரமூர்த்திக்காக அருவி மதன் ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு இந்த விருதினை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனான்டாள் முரளி ராமசாமி, செயலாளர் கதிரேசன், நடிகர் சங்க தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், இயக்குநர் சேரன் ஆகியோர் வழங்கினர். விருதாளர்கள் அனைவருக்கும் விருதுடன் ஒரு இலட்ச ரூபாய் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாற்று ஊடக மையத்தைத் சார்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பேராசிரியர் காளீஸ்வரன் தலைமையில் மேடையில் தோன்றி தமிழ் மண்ணின் தொல்லியல் கலைகளை நிகழ்த்தி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment