Namma Veettu Pillai Review
நம்ம வீட்டு பிள்ளை: உணர்ச்சிகரமான காவியம்
'கடைக்குட்டி சிங்கம்' என்ற ஒரு கூட்டுக்குடும்ப கதையில் அக்காள்கள், தம்பி என்ற பாசப்பிணைப்பு கதையை தந்த இயக்குனர் பாண்டிராஜ், ஒரே வருடத்தில் மீண்டும் அதே கூட்டுக்குடும்ப கதையில் அண்ணன் தங்கை கதையை கூறி அதில் வெற்றியும் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அதனை சரியாக செய்து முடித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். ‘பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலேயே’ வரிசையில் அண்ணன் தங்கை பாசத்தை பல வருடங்கள் பேசப்படும் ஒரு படமாக இந்த படம் இருக்கும்
கடைக்குட்டி சிங்கம்’ போலவே ஒரு பெரிய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் அறிமுகத்துடன் படம் ஆரம்பமாகிறது. இந்த அறிமுகம் படத்தின் ஓட்டத்திற்கு எந்த அளவுக்கு உதவும் என்று கூற முடியாவிட்டாலும் இதுவொரு வழக்கமான நடைமுறையாக கருதப்படுகிறது. பாசமலர் சிவாஜிகணேசன், சாவித்திரி ஆகியோர்களின் இன்றைய வடிவமாக சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் தங்கள் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒட்டுமொத்த குடும்பமே ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் தனது சகோதரியை வெறுத்தபோதிலும் தங்கைக்கு உறுதுணையாக இருக்கின்றார் சிவகார்த்திகேயன். சரியான இடங்களில் பிளாஷ்பேக்குகள் வைத்து இயக்குனர் பாண்டிராஜ் திரைக்கதையை சாமர்த்தியமாக நகர்த்தி கொண்டு சென்றுள்ளார். அதேபோல் இன்னொரு குடும்பத்தின் பெரியவராக பாரதிராஜாவும், அவருடைய மகன்கள், மருமகள்கள் என ஒரு குடும்பமும் இந்த படத்தில் உண்டு.
கிராமத்து கதை என்றாலே இரண்டு பெரிய குடும்பங்கள், பங்காளிகள், பகையாளிகளாக மாறுவது, திருவிழா, வீர விளையாட்டு போட்டி ஆகியவை இருப்பது வழக்கம் என்பதால் இவை அனைத்தும் இந்த படத்திலும் உண்டு. கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தி செய்ததை இங்கு சிவகார்த்திகேயன் செய்துள்ளார். குடும்ப உறவுகள் என்பது தமிழர்களை பொருத்தவரை உணர்ச்சிபூர்வமான ஒன்று என்பதை படத்தில் ஆங்காங்கு மனதில் பதியும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே குடும்பம் தான் குழப்பங்கள், மனக்கஷ்டத்திற்கும் காரணம் என்பதும் ஒவ்வொரு குடும்பத்திலும் நடப்பதை இயக்குனர் இந்த படத்தில் பதிவு செய்துள்ளார். அதேபோல் கிராமத்து கலாச்சாரமான சீர்வரிசை, கிரகப்பிரவேசம், நிச்சயதார்த்தம், விருந்து உள்பட பல விஷயங்களை திரையில் பார்க்கும்போது நம் வீட்டிலேயே அந்த நிகழ்ச்சிகள் நடப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுகிறது.
சிவகார்த்திகேயனும் ஐஸ்வர்யாராயும் அரும்பொன் மற்றும் துளசியாகவே மாறிவிட்டனர். மிகைப்படுத்தாத நடிப்பு, கண்ணீரை வரவழைக்கும் பாசப்பிணைப்பு காட்சிகள், குறிப்பாக நட்ராஜை ஐஸ்வர்யா திருமணம் செய்யும் காட்சியில் நம்மை மீறி கண்களில் கண்ணீர்.
சூரியை மிகச்சரியாக பயன்படுத்த தெரிந்த இயக்குனர்களில் ஒருவர் பாண்டிராஜ் என்பது இந்த படத்தை பார்த்து புரிந்து கொள்ளலாம். படம் முழுவதும் குறிப்பாக முதல் பாதியில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து அவர் செய்யும் காமெடிக்கு தியேட்டரே குலுங்கி குலுங்கி சிரிக்கின்றது. இந்த உணர்ச்சிமயமான செண்டிமெண்ட் படத்தில் சூரியின் கேரக்டர் இல்லை என்றாலும் கொஞ்சம் வறட்சியாகத்தான் இருந்திருக்கும்
இந்த படத்தின் மிகப்பெரிய பலம் பாண்டிராஜின் உணர்ச்சியமான கதை, நேர்த்தியான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள் என்பதை கூறலாம். ஒரு சகோதரியின் திருமணத்தை முடிக்க ஒரு அண்ணன் காணும் கனவு, அதை நிறைவேற்ற படும் கஷ்டங்கள், சரியான நபரை தங்கைக்கு தேட வேண்டும் என்ற பொருப்பு என ஒரு அண்ணன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சிவகார்த்திகேயன் கேரக்டர் உள்ளது.
நாயகி அனு இமானுவேல் கேரக்டர் கொஞ்சம் குழப்பமாக உள்ளது. தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு ஒரு ஜோடி இருக்க வேண்டும் என்ற இடத்தை மட்டும் இந்த அழகான நாயகி பூர்த்தி செய்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியில் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் சொல்ல முடியாது. இமானின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். கிராமத்தின் அழகு, திருவிழா, விசேஷ காட்சிகளில் நீரவ் ஷா அற்புதமாக செயல்பட்டுள்ளார். படத்தின் ஒரே குறையாக பார்க்கப்படுவது சீரியல் போல் செண்டிமெண்ட் காட்சிகள் கொஞ்சம் அதிகம் என்பதை தவிர வேறு பெரிய குறைகள் இந்த படத்தில் இல்லை.
மொத்தத்தில் ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் குடும்பத்துடன் பார்த்து ரசித்து விடுமுறையை கொண்டாடும் ஒரு படமாக உள்ளது. சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு மற்றும் குடும்ப உறவுகள், அண்ணன் தங்கை பாசத்திற்காக ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்
- Read in English