சூப்பர் ஸ்டார் படத்தில் ரீஎண்ட்ரி ஆனதில் மகிழ்ச்சி. நமீதா

  • IndiaGlitz, [Wednesday,October 12 2016]

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த நடிகை நமீதா திடீரென உடல் எடை அதிகரித்த காரணத்தினால் வாய்ப்புகள் இன்றி சில காலம் கோலிவுட்டில் இருந்து விலகி இருந்தார். பின்னர் மீண்டும் ரீஎண்ட்ரி ஆக வேண்டும் என்ற வைராக்கியத்துடன் உடல் எடையை 20 கிலோ வரை குறைத்து அவர் நடித்த படம்தான் 'புலிமுருகன்' என்ற மலையாள படம்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடித்த இந்த படம் கேரளாவில் எதிர்பார்த்ததை விட பலமடங்கு வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனது ரீஎண்ட்ரி படம் சூப்பர் சக்ஸஸ் ஆனது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது:
கடந்த ஆண்டு ரீ எண்ட்ரிக்காக கதைகள் கேட்டபோது 'புலிமுருகன்' படத்தின் இயக்குனரிடமும் கேட்டேன். நம் தென்னிந்திய மொழிகளில் இதுவரை வந்திராத அளவுக்கு அட்வென்சர் வகை கதையாக இருந்தது. மிகவும் வித்தியாசமான இந்தக் கதையை எப்படி எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமானது. படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ஜுலி. ஒரு பணக்கார குடும்பத்தில் இருப்பவள். புலிமுருகனின் குணத்தைப் பார்த்து அவர்மீது காதல்வயப்படும் கேரக்டர். படம் முழுக்கவே புலிமுருகனுடனேயே இருந்து அவருக்கு ஆதரவாக இருக்கும் வேடம். ஒரு சூப்பர்ஸ்டார் படத்தில் ​இடம் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா? உடனே ஓகே சொல்லிவிட்டேன்.
பொதுவாக மலையாள படங்கள் என்றாலே குறைவான பட்ஜெட்டில் தான் எடுப்பார்கள் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இந்த படம் சுமார் 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. நான் எப்போதுமே பட்ஜெட், ஹீரோ ஆகியவற்றை பார்ப்பவள் இல்லை. ஆனால் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு அமைந்தது சந்தோஷமாகத் தான் இருக்கிறது.
மோகன்லால் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது நமக்கு தெரியும். ஆனால் நமக்கு அதிகம் தெரியாத அவரது இன்னொரு முகம் இண்டெலெக்சுவல். ஆமாம், அத்தனை புத்தகங்கள் படிக்கிறார். அவரது வாசிப்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது. புலிமுருகன் கேரக்டரில் மோகன்லால் தவிர வேறு ஒருவரை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு அந்த பாத்திரமாகவே மாறினார். படப்பிடிப்பில் திடீரென்று ஒரு ஆசை வந்தது. அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும். கேட்டவுடனேயே ஓ… தாராளமா… என்று எடுத்துக்கொண்டார். அந்த படம் அத்தனை பெரிய வைரலாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.