Tamil »
Cinema News »
நளினி-பிரியங்கா சந்திப்பில் என்ன நடந்தது? சுயசரிதையில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்
நளினி-பிரியங்கா சந்திப்பில் என்ன நடந்தது? சுயசரிதையில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்
Friday, November 25, 2016 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினியின் சுயசரிதை நூல் நேற்று சென்னையில் வெளியானது. இந்த புத்தகத்தின் முக்கிய அம்சமே ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி -நளினி சந்திப்பில் என்ன நடந்தது என்பதுதான்? இதுவரை இந்த சந்திப்பில் நடந்தது என்ன? என்று யாருக்குமே தெரியாத நிலையில் இந்த புத்தகத்தில் நளினி, அந்த சந்திப்பை விரிவாக விளக்கியுள்ளார். இதோ அவர் கூறியது இதுதான்:
அது 19.3.2008 திங்கட்கிழமை. அப்போது முற்பகல் 11 மணி இருக்கும். சிறை ஊழியர்களும், அதிகாரிகளும் இங்கும், அங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். வெளியில் இருந்த கைதிகள் அனைவரையும் உடனடியாக அவரவர் சிறை அறைக்குள் சென்று விடும்படி கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த பரபரப்பு ஒரு அசாதாரணமான சூழ்நிலையாகப்பட்டது. நான் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததால் எனக்கு அந்த பிரச்சினை இல்லை. அதனால் அவர்கள் என் பக்கம் வர வேண்டிய அவசியம் இல்லை. அப்போது எனது அறையில் ஒரு புதியவர்.
எனக்கு எதிரே கண்காணிப்பாளரின் நாற்காலியில் உட்கார்ந்திருந்த புதியவரின் பார்வை என் மீதே அம்புகளாய் குத்தியிருந்தது. எனக்கு இது மேலும் குழப்பத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது. பிரியங்கா அவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்காகாந்தி என்பதை அறிந்ததும் எனது உடலில் ஜில்லென்ற உணர்வு, நாடி நரம்புகள் தளர்ந்து போய் விட்டது. அதிர்ச்சியில் நான் சிலை போல் நின்றதை பார்த்ததும் அவர் நான் பிரியங்காகாந்தி என்றார்.
உதடுகள் துடித்தபடி பட்டென்று என்னை நோக்கி ஏன் அப்படி செய்தீர்கள்? எங்க அப்பா மிக மென்மையானவராயிற்றே, நல்லவராயிற்றே, எதுவானாலும் பேசி தீர்த்துக்கொண்டிருக்கலாமே, ஏன் அப்படி செய்தீர்கள் என்றவர் கண்கள் குளமாகி அழ ஆரம்பித்து விட்டார். அந்த கண்ணீரை நான் எதிர்பார்க்கவில்லை. அந்த காட்சி என்னை நிலை குலைய வைத்தது. அழுதுகொண்டே இருந்தார்.. அய்யோ, மேடம் எனக்கு எதுவும் தெரியாது.
நான் எறும்புக்கு கூட தீங்கு நினைக்க முடியாதவள். என் சந்தர்ப்ப சூழ்நிலை என்னை இப்படி குற்றவாளியாக நிறுத்தியிருக்கிறது. மனதளவில் யாருக்கும் தீங்கை நினைக்காதவள், பிளீஸ் என நானும் கதறி அழ ஆரம்பித்து விட்டேன். என் வலியை விட அவர் அழுவதை தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் அழுதபடி இருந்தார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
ஒரு கட்டத்தில் பட்டென்று உண்மையில், நான் குற்றவாளி தான் என நீங்கள் நம்பினால் இப்போதே உங்கள் முன்னாலே என் உயிரை விட்டு விடுகிறேன் அல்லது உங்கள் விருப்பம் போல உயிரை எடுத்துக்கொள்ளுங்கள். அதுவே எனக்கு அமைதியை தரட்டும் என்றேன். கண்களை துடைத்துக்கொண்ட பிரியங்கா சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
அவரது அழுது சிவந்த கண்களையும், முகத்தையும் பார்க்க பார்க்க எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. யார்? யாருக்கு ஆறுதல் கூற முடியும். காட்டமான குரல் அவரது பார்வையில் நான் குற்றவாளி, என்னுடைய பார்வையில் அவர் பாதிக்கப்பட்ட அப்பாவி. அவ்வளவு தான். நான் நடந்த விவரங்களை தெரிவித்தேன். என் பக்கமும், என் கணவர் பக்கமும் உள்ள நியாயத்தையும் மற்றவர்கள் பற்றியும் கூறினேன். அப்போதுதான் அவர் முகம் மாறத்தொடங்கியது. அவர் பார்வையும் சிவந்து கொண்டிருந்த முகமும் அதை வெளிப்படுத்தியது.
ஒரு கட்டத்தில் ஒவ்வொன்றையும் குறுக்கு கேள்வி மூலம் மறுத்தபடி அதிருப்தியை வெளிப்படுத்தினார். எதிர் கேள்வியால் மறுத்தபடி, உன்னைப் பற்றி சொன்னாய்.. உன் கணவரைப் பற்றி சொன்னாய். அதில் ஒரு நியாயம் உண்டு. அவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்...? அவர்களை பற்றி நீங்கள் ஏன் அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள்?' என சற்று காட்டமாக கேட்டார். என்ன எல்லாமே பொய்யா? அப்படியான அதிருப்தியையும் எதிர்ப்பையும் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இல்லைங்க மேடம்.
அவர்களும் அப்பாவிகள்தான்... என நான் சொல்ல முற்பட்டபோதே, இதோ பாருங்கள். நீங்கள் அனைவருமே நிரபராதிகளா? உங்களில் யாருக்குமே இந்த சம்பவத்தில் தொடர்பில்லையா? அப்படி என்றால் இந்த விசாரணை, சி.பி.ஐ. சாட்சிகள், ஆவணங்கள் எல்லாமும் பொய்யா? நீதிமன்ற முடிவுகள் தவறானதா? என்ன சொல்ல வருகிறீர்கள் என கோபத்தின் உச்சிக்கு போனபோது எனக்கு நடுநடுங்கத் தொடங்கிவிட்டது. பிரமை பிடித்தது அதற்கு மேலும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஸ்தம்பித்து நின்றேன். சி.பி.ஐ. ஜோடிப்புகள், தீர்ப்புகள் எல்லாமே தவறுதான் என்பதை எப்படி அவருக்கு புரியவைப்பது? அப்படிச் சொன்னால் அவர் குடும்பம் ஏமாற்றப்பட்டிருக்கிறது என்பதை அவரால் சகிப்பது மிக சிரமமாச்சே என்று அப்படியே பிரமை பிடித்து பார்த்திருந்தேன். மேற்கொண்டு பேச எனக்கு நா குழறியது.
எங்களின் சந்திப்பு தொடர்ந்து 75-லிருந்து 85 நிமிடங்கள் வரை இருந்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நீண்டது. 50 நிமிடங்கள் வரை நான் சொன்ன விளக்கத்தை எல்லாம் உள்வாங்கிக்கொண்டே சின்ன சின்ன கேள்விகளை எழுப்பியிருந்தார். முகத்தில் அதிருப்தியும், வெறுப்புமாக இருந்தது. சமயத்தில் ஆச்சரியம், வியப்பு ஆகியவையும் வெளிப்பட்டன. இந்த வழக்கின் விசாரணை ஒட்டுமொத்தமாக தவறு என்று நான் சொன்ன உண்மையை அவரது புண்பட்டிருந்த மனசு ஏற்க தயாராக இருக்கவில்லை. அந்த நிராகரிப்பு கோபமாக வெளிப்பட்டது. அந்த கோபம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்த நான் அமைதியானேன்.
இவ்வாறு நளினி தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments